விளையாட்டு

'பிசிசிஐ தலைவராக இன்னும் 3 ஆண்டுகள் நீடிப்பார் கங்குலி'-திருத்தங்களால் வந்த மாற்றம்!

'பிசிசிஐ தலைவராக இன்னும் 3 ஆண்டுகள் நீடிப்பார் கங்குலி'-திருத்தங்களால் வந்த மாற்றம்!

webteam

பிசிசிஐ அமைப்பின் சட்டவிதிமுறைகளில் மேற்கொண்ட திருத்தங்களுக்கு இன்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் மூலம் பிசிசிஐ தலைவர் கங்குலி , செயலாளர் ஜெய் ஷா மற்றும் மற்ற நிர்வாகிகள் தங்களது பதவிகளில் மேலும் 3 ஆண்டுகள் தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது.

பிசிசிஐ எனப்படும் போர்ட் ஆஃப் கிரிக்கெட் கவுன்சில் ஆஃப் இந்தியா (Board of Cricket Council of India) அமைப்பின் விதிமுறைகளை மாற்றம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருந்தது. அதில் முக்கியமாக நிர்வாகிகளின் பதவிகள் குறித்த விஷயங்களில் ஒருவர் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் வாரியங்களின் தலைவர் உள்ளிட்ட நிர்வாக பொறுப்புகளில் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இருந்தால் அதன் பிறகு மூன்றாண்டுகள் கழித்து தான் மீண்டும் நிர்வாக பதவிகளை வகிக்க முடியும் என முடிவெடுக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது பிசிசிஐ அமைப்பின் தலைவராக உள்ள சவுரவ் கங்குலி மற்றும் அந்த அமைப்பின் செயலாளர் ஜெய்ஷா ஆகியோருடைய பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளது. ஏற்கனவே சவுரவ் கங்குலி கல்கத்தா கிரிக்கெட் வாரியத்திலும், ஜெய் ஷா குஜராத் கிரிக்கெட் வாரியத்திலும் ஐந்து ஆண்டுகள் பதிவு வகித்ததால் அவர்கள் தொடர்ந்து அந்த பதவிகளில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது

இதனை அடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து தான் மீண்டும் நிர்வாகிகளாக பதவி வைக்க முடியும் என்ற அந்த குறிப்பிட்ட விதிமுறையை நீக்கி பிசிசிஐ புதிதாக சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருந்தது. இந்த சட்ட திருத்தத்தை அங்கீகரிக்குமாறு பிசிசி அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பானது இன்று வழங்கப்பட்டது. இந்த திருத்தத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக சவ்ரவ் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் தங்களது பதவிகளில் தொடர்ந்து நீடிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.