உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சில வீரர்களை மட்டுமே அனைத்து நாட்டு ரசிகர்களுக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட வீரர்களில் ஒருவர்தான் கிறிஸ் கெயில். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தூணாகவும் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் வரப்பிரசாதமாகவும் கருதப்படுபவர் கிறிஸ் கெயில். இவர் விளாசலில் சுழன்று விழாத எந்த அணியும் உலகில் இல்லை. அதைப்போல டி20 போட்டிகளில் முடிசூடா மன்னனாக இருப்பதால் அவர் "தி யூனிவர்ஸ் பாஸ்" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார் கிறிஸ் கெயில்.
1999-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் கெயில். 2001-ஆம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதற்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக 2002-ஆம் ஆண்டு சதம் அடித்தார். 2000-ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
2006-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் அறிமுகமானார். முதல் உலகக்கோப்பை டி-20 தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தனி ஒருவனாக நின்று யாரும் காணாத வகையில் முதல் உலகக்கோப்பை போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்து டி-20 வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
மேற்கு இந்திய தீவுகளின் ஜமைக்காவில் உள்ள லூகாஸ் கிரிக்கெட் கிளப்பில் தனது ஆரம்ப கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் கெயில். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கெயில், உள்ளூர் டி -20 போட்டிகளில் விளையாடியுள்ளார். உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த வீரர் கெயில் மட்டுமே.
ஐ.பி.எல். போட்டிகளில் புனே அணிக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் யாரும் காணாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டினார். புனே அணியின் பந்து வீச்சாளர்களை தனது பேட்டிங் மூலம் மிரட்டினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்து ஐ.பி.எல். வரலாற்றில் சரித்திரம் படைத்தார்.
ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 4537 ரன்களுக்கு மேல் குவித்துள்ள கெயில் அதிகபட்சமாக 175 ரன்களை எடுத்துள்ளார். இது இதுவரை யாரும் முறியடிக்க முடியாத சாதனையாக இருந்து வருகிறது. இப்போது 41 வயதாகும் கிறிஸ் கெயில் 39 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஆனாலும் ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். நேற்றையப் போட்டியில் கூட 45 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அதிர வைத்தார் கெயில். மொத்தமாக ஐபிஎல்லில் இதுவரை 330 சிக்ஸர்கள் 370 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார் கெயில்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மட்டுமின்றி சிட்னி தண்டர், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தாக்கா கிளாடியேட்டர்ஸ், பரிசால் பர்னர்ஸ், லாகூர் கலாந்தார்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், ஸ்டான்ஃபோர்டு சூப்பர்ஸ்டார்ஸ் என பல்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
உலகளவில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் "லெக் மூவ்மென்ட்" கிறிஸ் கெயிலிடம் இல்லை. ஆனால் அவருக்கு Hand and Eye Coordination அபாரமாக உண்டு. அதனால்தான் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருந்த இடத்திலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் சிக்ஸர்களை பறக்கவிட்டு தெறிக்கவிடுவார் கெயில். அதற்காகதான் அவரை அன்புடன் "தி யூனிவர்ஸ் பாஸ்" என்கிறோம்.