ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்களை குவிக்கும் வீரர்களுக்கு ஆரஞ்சு நிற தொப்பியை கொடுத்து கவுரவப்படுத்துவது வழக்கம். தொடர் முழுவதுமே பல்வேறு வீரர்களிடம் மியூசிக்கல் சேர் போல இடம் மாறிக் கொண்டே இருக்கும் இந்த ஆரஞ்சு நிற தொப்பி. இந்த முறை டெல்லி அணியின் தவான், பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளசிஸ் என நால்வரிடமும் இந்த ஆரஞ்சு கேப் கைமாறிக் கொண்டே இருந்தது.
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி இறுதிப் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் ருதுராஜ் 32 ரன்களை சேர்த்து 635 ரன்கள் உடன் சீசனை நிறைவு செய்துள்ளார். ஒரு சதம் நான்கு அரை சதம் என 16 இன்னிங்ஸ் விளையாடி இந்த ரன்களை ருதுராஜ் சேர்த்துள்ளார்.
கே.எல்.ராகுல் 626 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில் அவரை பின்னுத்தள்ளிவிட்டார் கெய்க்வாட். இப்போதைக்கு அவரது ரன்களை முந்துவதற்கான ஒரே வீரராக மற்றொரு சென்னை வீரர் டூப்ளசிஸ் உள்ளார். டூப்ளசிஸ் 600 ரன்களை கடந்துவிட்ட நிலையில் அவருக்கு இன்னும் 30 ரன்களே தேவையாக உள்ளது.