இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது.
7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரக நாடுகள் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. தகுதிச்சுற்று மற்றும் முக்கியச்சுற்று போட்டிகள் கொண்டதாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. தகுதிச்சுற்றில் குரூப் ஏ பிரிவில் அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளளன. தகுதிச்சுற்று பி பிரிவில் பங்களாதேஷ், ஓமன், பப்புவா நியு கினியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
தகுதிச்சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் SUPER 12 சுற்றுக்கு முன்னேறும். முக்கிய சுற்றில் SUPER 12 சுற்றில், குரூப் 1 சுற்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆகிய அணிகளுடன் தகுதிச்சுற்றில் இருந்து தேர்வாகும் இரண்டு அணிகள் இடம்பெறும். குரூப் 2 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் தகுதிச்சுற்றில் தேர்வாகும் இரண்டு அணிகள் இடம்பெறும். SUPER 12 சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும்.
நவம்பர் 10-ந்தேதி முதல் அரையிறுதி ஆட்டமும், 11-ஆம் தேதி இரண்டாவது அரையிறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளது. இறுதியாட்டம் நவம்பர் 14 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஓமன் அணி, பப்புவா நியு கினியா அணியை எதிர்த்து விளையாடுகிறது. சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 24-ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.