19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றியை எட்டியது.
மேற்கிந்திய தீவுகளின் ஆண்டிகுவாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் டாம் பிரெஸ்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் 61 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி பின்னர் 91 ரன்களில் 7வது விக்கெட்டையும் பறிகொடுத்தது. இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ரேவ் மட்டும் நிலைத்து விளையாடி 95 ரன்களை அடித்து அந்த அணியின் ரன்களை 189 ஆக உயர வழிவகுத்தார். 44.5 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பெவிலியன் திரும்பியது. இந்திய அணியின் ராஜ் பாவா 5 விக்கெட்டுகளையும், ரவி குமார் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அங்கிருஷ் ரகுவன்ஷி ரன் எதுவும் எடுக்காமலே பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ஷேக் ரஷீத் நிதானமாக விளையாடி 84 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சதம் விளாசிய கேப்டர் யஷ் துல், இந்தப் போட்டியில் 17 ரன்களிலேயே ஆட்டமிழக்க இந்தியாவின் ஆட்டம் சற்றே தடுமாற்றம் கண்டது. அப்போது ஜோடி சேர்ந்த நிஷாந்த் சிந்துவும், ராஜ் பாவாவும் பொறுப்பாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 67 ரன்களை சேர்த்தனர். ராஜ் பாவா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் களம்கண்ட விக்கெட் கீப்பர் தினேஷ் பானா அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் மிளிர்ந்த ராஜ் பாவா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய தென் ஆஃப்ரிக்காவின் டீவால்ட் பிரெவிஸ் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
வீரர்களுக்கு தலா ரூ.40 லட்சம் பரிசு
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய அணி வெற்றி பெற்றவுடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா வெற்றி பெற்ற அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் 40 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும், அணியின் உதவி பணியாளர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். சோதனையான காலகட்டத்திலும் வெற்றி பெறுவதற்கு தேவையான நெஞ்சுறுதியை இளம் வீரர்கள் வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். சிறப்பான வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தாங்கள் அறிவித்துள்ள ரொக்க பரிசைவிட வீரர்களின் முயற்சி மதிப்பிடமுடியாதது என கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ”எங்களுக்கு வேறுவழியில்லை; இவர்தான் ஓப்பனிங் இறங்குவார்”-வீரரின் பெயரை அறிவித்தார் ரோகித்!