3வது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்தது தொடர்பாக க்ருனால் பாண்டியாவிடம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பேட்டியெடுத்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் ஆர்சி ஷார்ட் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 28 (23) ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபிஞ்ச் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஆர்சி ஷார்ட்டும் 33 (29) ரன்களில் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் யாரும் எதிர்பாராத விதமாக க்ருனல் பாண்டியா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இறுதிவரை விளையாடிய கோலி அவுட் ஆகாமல் 41 பந்துகளில் 61 ரன்களை சேர்த்தார். இதனால் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக க்ருனால் பாண்டியாவும், தொடரின் நாயகனாக ஷிகர் தவானும் தேர்வு செய்யப்பட்டனர்.
4 விக்கெட்டுகள் எடுத்தது தொடர்பாகவும், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து க்ருனாலிடம் மைதானத்தில் பும்ரா பேட்டியெடுத்தார். அதில் “நான் தற்போது ஆட்ட நாயகனோடு இருக்கிறேன். க்ருனால் இன்று சிறப்பாக விளையாடி நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார்” என கேமராவை பார்த்து பேசினார்.
பின்பு “இதைப்பற்றி எப்படி நினைக்கிறீர்கள்” என்று க்ருனாலிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த க்ருனால், “முதலில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நம் அணி வென்றுவிட்டது என்பதை நினைத்து முதலில் மகிழ்ச்சி அடைகிறேன். அத்துடன் அதற்கு நான் ஒரு காரணமாக இருந்ததை நினைத்து பெருமை அடைகிறேன்” என்றார்.