விளையாட்டு

தோனியின் டி20 பார்ம்: வலுக்கிறது எதிர்ப்பு

தோனியின் டி20 பார்ம்: வலுக்கிறது எதிர்ப்பு

webteam

டி20 போட்டியில், இளைஞர்களுக்கு வழிவிட்டு தோனி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் தோனி, டி20 போட்டிகளில் சமீப காலமாக ரன் எடுக்க திணறி வருகிறார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோனி, 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். அவர் களமிறங்கிய போது, வெற்றிக்கு 65 பந்துகளில் 130 ரன்கள் தேவையாக இருந்தது.  ஒரு முனையில் கோலி சிறப்பாக விளையாடினாலும் தோனி பல பந்துகளை வீணடித்தார். அவரது 49 ரன்களில் பவுண்டரி மற்றும் சிக்சர் மூலம் 26 ரன்கள் கிடைத்தது. மற்ற 23 ரன்களை 32 பந்துகளில்தான் எடுத்தார். இதுதான் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இதனால் டி20 போட்டிகளில் தோனியின் பார்ம் கேள்விகளை எழுப்பியுள்ளது. 
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லட்சுமண், அகர்கர் ஆகியோர், ‘ஒரு நாள் போட்டிகளில் தோனி சிறந்த வீரர். ஆனல், டி20 போட்டிகளில் அவரது பார்ம் சிறப்பானதாக இல்லை. அவருக்கு பதில் வேறு வீரரை களமிறக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

இதனால் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கும் கடைசி டி20 போட்டியில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.