44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பல்வேறு நாடுகளை சார்ந்த நபர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதால் அங்கு பல்வேறு கலாசாரங்களையும், சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில்தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் செஸ் வீராங்கனை குலவுட் அகமது (Khuloud Ahamed) இந்த ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதற்காக தன் 2 வயது குழந்தை நௌராவுடன் இந்தியா வந்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் அணியின் முக்கிய வீராங்கனையாக குலவுட் அகமது உள்ளதால் இந்த ஒலிம்பியாட் தொடரில் அனைத்து போட்டிகளிலும் அவர் ஓய்வு பெறாமல் விளையாடி வருகிறார். போட்டி துவங்கும்போது வீரர்கள் வரும் வழியில் பார்த்தால் தன் மகள் நௌராவுடன் குலவுட் அகமது வருவதை அனைவராலும் பார்க்க முடியும்.
குலவுட் அகமது போட்டியில் பங்கேற்க உள்ளே சென்றவுடன் அந்த அணியில் விளையாடாத மற்ற வீரர்கள் மற்றும் அந்த அணியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பயிற்சியாளர்கள்தான் 2 வயது குழந்தையான நௌராவை பார்த்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் இன்று ஒலிம்பியாட் அரங்கிற்கு அருகே பெரிய செஸ் காய்ன்களை வைத்து அலங்கரிக்கப்பட்ட செஸ் அட்டையை பார்த்தவுடன் அழுது கொண்டிருந்த நௌரா துள்ளிக் குதித்து சென்று செஸ் விளையாட, அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
செஸ் தன்னார்வலர்கள் மற்றும் அவரை பார்த்துகொண்டு இருந்த செஸ் வீராங்கனைகள் சொல்ல சொல்ல, அந்த காய்ன்களை நகர்த்திய நௌரா சுற்றி இருந்த புகைப்பட கலைஞர்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனைத்து பக்கங்களிலும் திரும்பி விதவிதமாக போஸ் கொடுத்தும் அசத்தினார். விளையாட்டு எப்போதும் விளையாட்டை மட்டும் கற்றுத் தராது! அது ஒற்றுமை, பண்பாடு போன்றவற்றை கற்றுத் தரும் எனக் கூறும் கூற்றுக்கு இதுபோன்ற சம்பவங்கள் சான்றாக உள்ளது.