ஐபிஎல் கோப்பையை சென்னை மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சாம்பியன் படத்தை மூன்றாவது முறையாக வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மும்பை வான்கடே மைதானத்தில் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே, பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஹைதரபாத் அணி 20 ஓவர் முடிவில் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. கேப்டன் வில்லியம்சன் 47(36), பதான் 45(25) ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 18.3 ஓவரில் 181 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. சென்னை அணி சார்பில் வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்கள் குவித்தார். அதில் 8 சிக்சர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற சென்னை அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பல காயங்களுக்கு ஆறுதலாக இந்தக் கோப்பையை சென்னை மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘பல காயங்களுக்கு ஆறுதலாக இந்த ஐபிஎல் கோப்பையை சென்னை மக்களுக்கு சமர்ப்பணம் செயகின்றோம். காரியம் கை கைக்கூடியது. உங்கள் பாசத்திற்கும்; நேசத்திற்கும் தலை வணங்குகின்றேன். தாய் போல் எமை சீராட்டிய தமிழ்நாடு வாழியவே. அனைத்து துன்பங்களையும் மறந்து எங்கள் தோளோடு தோள் நின்றமைக்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார்.