விளையாட்டு

மைதானத்திற்கு வெளியே ஜாலியாக ஆட்டம் போட்ட தாய்லாந்து கிரிக்கெட் வீராங்கனைகள்..!

மைதானத்திற்கு வெளியே ஜாலியாக ஆட்டம் போட்ட தாய்லாந்து கிரிக்கெட் வீராங்கனைகள்..!

webteam

மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போது தாய்லாந்து வீராங்கனைகள் மைதானத்திற்கு வெளியே ஆடிய நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 7-ஆவது மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா பிப்ரவரி 21-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகள், A மற்றும் B என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேச அணிகளுடன் இந்திய அணி A பிரிவில் உள்ளது.

இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் முதல்முறையாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் தாய்லாந்து ஆகிய அணிகள் B பிரிவில் உள்ளன. தொடரின் இறுதிப்போட்டி மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி‌ புகழ்பெற்ற மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் தொடரின்போது தாய்லாந்து வீராங்கனைகள் மைதானத்திற்கு வெளியே ஆடிய நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது தாய்லாந்து அணியின் இன்னிங்ஸ் முடிந்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இந்நிலையில் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தாய்லாந்து வீராங்கனைகள் சிலர் நடனமாடினர். தாய்லாந்து வீராங்கனைகளின் அந்த நடனம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.