Wimbledon pt desk
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: கேஸ்பர் ரூட்கிரிகோர், கார்லஸ் அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

webteam

டென்னிஸ் உலகில் மிகவும் கவுரவ மிக்கதாக கருதப்படும் விம்பிள்டன் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், எஸ்டேனியாவின் மார்க் லஜாலுடன் மோதினார். ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்லஸ் அல்காரஸ் 7க்கு 6, 7க்கு 5, 6க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் லஜாலை வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

Wimbledon

மற்ற போட்டிகளில் இத்தாலியின் போக்னினி டிமிட்ரோவ் டேனில் மெட்விடேவ், வாவ்ரிங்கா, ஜானிக் சின்னர் உள்ளிட்டோர் வெற்றி பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறினர். விம்பிள்டன் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர் சுமித்நாகல், செர்பியாவின் மியோமிரிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக முன்னணி வீரர் சபலென்கா அறிவித்துள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனையான பெலாரசைச் சேர்ந்த சபலென்கா, அமெரிக்காவின் எமினா பெக்டாசை எதிர்கொள்ளவிருந்தார். ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்த சபலென்காவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் நிலவிய நிலையில், அவர் விம்பிள்டன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Wimbledon

மற்ற போட்டிகளில் முன்னணி வீராங்கனைகளான மேடிசன் கீஸ், நயோமி ஓசாகா, எரிகா ஆண்டிரீவா, கோகோ காஃப் உள்ளிட்டோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். அதேசமயம் முன்னணி வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.