Novak Djokovic X
டென்னிஸ்

தோல்வியே இல்லாமல் 33 போட்டிகளில் தொடர்வெற்றி! 11வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த ஜோகோவிச்!

2024 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடிவரும் உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச், 11வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

Rishan Vengai

2024ம் ஆண்டின் முதல் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் ஓபன் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பார்க்கில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 2024 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரானது ஜனவரி 14ம் தேதிமுதல் தொடங்கி ஜனவரி 28ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி ஜனவரி 28ம் தேதியும், பெண்கள் ஒற்றையர் பிரிவு அதற்கு முந்தைய நாளிலும் முடிவை எட்டுகின்றன.

இந்நிலையில், இந்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியா சென்றிருக்கும் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறிய அவர், இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் அமெரிக்க வீரரான டெய்லர் ஃபிரிட்ஸை எதிர்த்து களம் கண்டார்.

முதல் இரண்டு செட்களில் ஜோகோவிச்சுக்கு ஆட்டம் காட்டிய டெய்லர் ஃபிரிட்ஸ்!

உலகின் நம்பர் 1 நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 12ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸும் காலிறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டிலேயே ஆட்டம் அனல்பறந்தது. இரண்டு வீரர்களும் முதல் செட்டை கைப்பற்ற உயிரைக்கொடுத்து விளையாட, ஆட்டம் 6-6 என டைபிரேக்கர் முறைக்கு சென்றது. டைபிரேக்கரிலும் விட்டுக்கொடுக்காமல் ஜோகோவிச்சுக்கு டெய்லர் ஃபிரிட்ஸ் ஆட்டம் காட்ட, தன்னுடைய அனுபவத்தை வைத்து சுதாரித்த ஜோகோவிச் 7-6 (7-3) என முதல்செட்டை கைப்பற்றினார்.

Taylor Fritz

முதல் செட்டை கடைசிநேரத்தில் இழந்தாலும் இரண்டாவது செட்டில் அபாரமான ஆட்டத்தை ஆடிய டெய்லர் 6-4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். 1-1 என சமனாக போட்டி மாற ரசிகர்களுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது.

Novak Djokovic

ஆனால் அடுத்த 2 செட்களில் அசால்ட்டாக பாயிண்ட்களை அள்ளிய ஜோகோவிச், டெய்லருக்கு எந்தொவொரு சிறிய வாய்ப்பை கூட வழங்காமல் 6-2, 6-3 என கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். முதல்பாதியில் டெய்லர் தாக்குப்பிடித்தாலும் இரண்டாம் பாதியில் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தியதால் டெய்லரின் கிராண்ட்ஸ்லாம் கனவு முடிவுக்கு வந்தது.

11வது முறையாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் அரையிறுதி!

ஆஸ்திரேலியா ஓபன் என்றால் அதன் சூப்பர் ஸ்டார் நோவக் ஜோகோவிச் தான். அதிக முறை (10) ஆஸ்திரெலிய ஓபனை வென்றவரான அவர், 11வது முறையாகவும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஜனவரி 25ம் தேதியன்று அரையிறுதிப்போட்டியில் விளையாடவிருக்கும் ஜோகோவிச், இரண்டாவது காலிறுதியில் ஜானிக் சின்னர் vs ஆண்ட்ரே ரூப்லெவ் இருவருக்குமான மோதலில் வென்றுவரும் வீரரை எதிர்த்து விளையாடுவார்.

தொடர்ச்சியாக 33 சிங்கிள் போட்டிகள் வென்று சாதனை!

டெய்லர் ஃபிரிட்ஸை தோற்கடித்த பிறகு ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓபனில் ஒரு இமாலய சாதனையை படைத்தார். மொல்போர்னில் தொடர்ந்து 33 போட்டிகளில் வெற்றிபெற்று தோல்வியே சந்திக்காமல் இருந்துவரும் அவர், ஆஸ்திரேலியா ஓபனில் தொடர்ச்சியான அதிக ஒற்றையர் வெற்றிகளை பதிவுசெய்திருந்த மோனிகா செலஸின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.

Novak Djokovic

அடுத்த காலிறுதிப்போட்டிகள்:

Q2: ஜானிக் சின்னர் vs ஆண்ட்ரே ரூப்லெவ்

Q3: டேனில் மெத்வதேவ் vs ஹுபர்ட் ஹுர்காஸ்

Q4: கார்லோஸ் அல்கராஸ் vs அலெக்சாண்டர் ஸ்வெரேவ்