Djokovic pt desk
டென்னிஸ்

தொடங்கியது ஜோகோவிச் ஆட்டம்.. முதலிரு செட்களை இழந்தபோதும் போராடி போட்டியை வென்று அசத்தல்! #USOpen

முதலிரு செட்களை தோற்றிருந்தாலும், வழக்கம்போல் அசத்தல் கம்பேக்கை அரங்கேற்றி அடுத்து மூன்று செட்களையும் கைப்பற்றினார் ஜோகோவிச்.

Viyan

அமெரிக்க ஓப்பன் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் சக செர்பிய வீரர் லாஸ்லோ ஜெரேவை ஐந்து செட்களில் வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச். முதலிரு செட்களையும் அவர் தோற்றிருந்தாலும், வழக்கம்போல் அசத்தல் கம்பேக்கை அரங்கேற்றி அடுத்து மூன்று செட்களையும் கைப்பற்றினார் அவர்.

Djokovic v/s Laslo Djere

ஆண்டின் இறுதி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓப்பன் நியூ யார்க்கில் நடந்து வருகிறது. ஆண்கள் பிரிவின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் சனிக்கிழமை காலை செர்பிய வீரர்கள் நோவக் ஜோகோவிச்சும், லாஸ்லோ ஜெரேவும் நேருக்கு நேர் மோதினார்கள். 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற ஜோகோவிச், 32ம் நிலை வீரரான ஜெரேவை எளிதாக வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோகோவிச்சுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சி கொடுத்தார் ஜெரே. ஜோகோவிச்சின் சர்வீஸை பிரேக் செய்து முதல் செட்டை 6-4 என்று கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் ஜோகோவிச் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், முதல் செட்டில் செய்ததையே மீண்டும் அரங்கேற்றினார் ஜெரே.

இரண்டு செட்கள் பின்தங்கியிருந்த நிலையில் ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியை அமெரிக்க ஓப்பன் எதிர்நோக்கியுள்ளதோ என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இருந்தாலும், இது ஜோகோவிச் ஆயிற்றே. தன் கரியரில் எண்ணற்ற போட்டிகளில் இதுபோன்று முதலிரு செட்களைத் தோற்றுவிட்டு அதன்பிறகு போட்டியை வென்றிருக்கிறார். அதனால், ஜோகோவிச்சின் வழக்கமான ஆட்டம் தொடங்கும் என்று பலரும் கருதினார்கள். நினைத்ததுபோலவே அதுதான் நடந்தது. அடுத்த இரண்டு செட்களிலும் ஜெரேவின் சர்வீஸ்களை தலா இரு முறை பிரேக் செய்து அந்த செட்களை 6-1 என கைப்பற்றினார் அவர். போட்டி ஐந்தாவது செட்டுக்குச் செல்ல, அதையும் 6-3 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்.

Djokovic

ஆண்கள் பிரிவின் மற்ற போட்டிகளில் ஒன்பதாம் நிலை வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் நேர் செட்களில் மென்சிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பத்தாம் நிலை வீரரான ஃபிரான்சிஸ் டியாஃபோ மன்னாரினோவை வீழ்த்தினார். முதல் செட்டை டை பிரேக்கரில் இழந்திருந்த டியாஃபோ, அடுத்த 3 செட்களையும் வென்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் பிரிவில், கஜகஸ்தானைச் சேர்ந்த நான்காம் நிலை வீராங்கனையான எலீனா ரிபகினா அதிர்ச்சித் தோல்வியடைந்து இந்தத் தொடரிலிருந்து வெளியேறினார். மூன்றாவது சுற்றில் ரொமேனியாவின் சொரானா சிர்ஸ்டாவை எதிர்கொண்ட ரிபகினாவுக்கு ஆரம்பம் முதலே அடுத்தடுத்த சவால்கள் காத்துக்கொண்டிருந்தது. தன் சர்வீஸ்களால் மிரட்டிய சிர்ஸ்டாவை சமாளிப்பது ரிபகினாவுக்குக் கடினமாக இருந்தது. முதல் செட்டில் ரிபகினாவின் சர்வீஸை பிரேக் செய்த சிர்ஸ்டா 6-3 என முன்னிலை பெற்றார். இரண்டாவது செட் டை பிரேக் வரை சென்றது. டை பிரேக்கரை 8-6 என்று வென்ற ரிபகினா, ஆட்டத்தை மூன்றாவது செட்டுக்கு எடுத்துச் சென்றார். மூன்றாவது செட்டில் இருவரும் மாறி மாறி சர்வீஸ்களை பிரேக் செய்தாலும் இறுதியில் 6-4 என வென்றார் சிர்ஸ்டா. இதன்மூலம் போட்டியை வெல்லக் கூடிய ஒருவராகக் கருதப்பட்ட ரிபகினா மூன்றாவது சுற்றிலேயே வெளியேறினார்.

Djokovic

மற்ற போட்டிகளில் முன்னிலை வீராங்கனைகளான கோகோ காஃப், பெலிந்தா பென்சிச், கரோலின் வோஸ்னியாக்கி, இகா ஸ்வியாடெக், கரோலினா மூசோவா ஆகியோர் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்கள்.