Aryna Sabalenka PTI
டென்னிஸ்

US OPEN | பரபரப்பான அரையிறுதியை வென்ற அரீனா சபலென்கா... இறுதிப் போட்டியில் கோகோ காஃபுடன் மோதல்..!

இந்திய நேரப்படி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை நடக்கவுள்ள இந்த இறுதிப் போட்டியில் நிச்சயம் கோகோ காஃபுக்கு பெரும் ஆதரவு இருக்கும்.

Viyan

அமெரிக்க ஓப்பன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து வெற்றியை வசமாக்கியிருக்கிறார் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான அரீனா சபலென்கா. மேடிசன் கீஸ் உடனான அந்தப் போட்டியின் முதல் செட்டை 6-0 என இழந்திருந்தாலும் அடுத்த இரு செட்களையும் டை பிரேக்கரில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறார் அவர். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃபுடன் அவர் பலப்பரிட்சை நடத்தவுள்ளார்.

முதல் ஃபைனலிஸ்ட்: கோகோ காஃப்

Coco Gauff


வெள்ளிக் கிழமை அதிகாலை நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் செக் குடியரிசன் கரோலினா மூசோவாவை எதிர்த்து களம் கண்டார். உள்ளூர் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு களம் கண்ட காஃப் ஆரம்பம் முதலே இந்தப் போட்டியில் பெரும் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 6-4 என வென்ற அவர், இரண்டாவது செட்டில் சற்று சறுக்கினார். இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு சிறப்பாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

19 வயதேயான கோகோ காஃப் தன்னுடைய இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பைனலுக்குத் தகுதி பெற்றிருக்கிறார். கடந்த சில மாதங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டுவரும் அவர், அமெரிக்க ஓப்பன் தொடங்கும்போதே வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் கடுமையான நெருக்கடிக்குப் பிறகு மிகச் சிறப்பாக செயல்பட்டார் அவர். ஒருசில வீரர்கள் இந்தத் தொடரின் போட்டிகள் நடத்தப்படும் நேரம், தட்பவெட்பநிலை போன்றவை கடுமையாக பாதிக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தனர். அப்படிப்பட்ட நிலையில், ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் இடைவிடாமல் விளையாடினார் அவர். பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜெஸ்ஸிகா பெகுலா உடன் இணைந்து விளையாடி அதிலும் காலிறுதி வரை முன்னேறியிருந்தார் காஃப். அதுமட்டுமல்லாமல் கலப்பு இரட்டையரிலும் கூட பங்கேற்றிருந்தார். இப்படி தொடர்ந்து போட்டிகளில் விளையாடியிருந்தாலும், மிகச் சிறப்பாக செயல்பட்டு ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறார் அவர்.

இரண்டாவது ஃபைனலிஸ்ட்: அரீனா சபலென்கா

Aryna Sabalenka

இரண்டாவது அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார். ஏற்கெனவே ஒரு அமெரிக்க வீராங்கனை ஃபைனலுக்குத் தகுதி பெற்றுவிட்டிருந்ததால், கீஸுக்கு அதீத ஆதரவு இருந்தது. அந்த ஆதரவை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கீஸ் ஆரம்பம் முதலே அசத்தினார். முதல் செட்டின் முதல் கேமிலேயே சபலென்காவின் சர்வீஸை முறியடித்து அசத்தினார். அந்த சர்வீஸ் மட்டுமல்ல, சபலென்காவின் முதல் மூன்று சர்வீஸ்களையும் பிரேக் செய்த கீஸ், முதல் செட்டை 6-0 என வென்று ஒட்டுமொத்த டென்னிஸ் உலகத்துக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இரண்டாம் நிலை வீராங்கனையான சபலென்காவின் முதல் 3 சர்வீஸ்களையும் ஒரு வீராங்கனை முறியடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இரண்டாவது செட்டின் தொடக்கத்திலும் கீஸ் தன்னுடைய ஆதிக்கத்தைத் தொடர்ந்தார். இருந்தாலும் நிதானமாக விளையாடி கம்பேக் கொடுத்தார் சபலென்கா. இரண்டாவது செட்டின் இரண்டாவது கேமில் முதல் முறையாக தன் சர்வீஸை வென்றார் அவர். வென்றுவிட்டு அவர் கைகளைத் தூக்கிக் கொண்டாடி அதுவரை சந்தித்து வந்த நெருக்கடியை போக்கிக்கொண்டார் அவர். அதன்பின் இருவரும் தங்கள் சர்வீஸ்களை மாறி மாறி பிரேக் செய்துகொள்ள அந்த செட் டை பிரேக்கர் வரை சென்றது. ஒருகட்டத்தில் 5-4 என முன்னிலையில் இருந்த கீஸ், தன் சர்வீஸை வென்று ஃபைனலுக்கு முன்னேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறப்பாக செயல்பட்டு கீஸின் சர்வீஸை பிரேக் செய்தார் சபலென்கா. இறுதியில் டை பிரேக்கரில் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 7-1 என வென்றார். மூன்றாவது செட்டிலும் இதே நிலை தொடர, அந்த செட்டும் டை பிரேக்கர் வரை சென்றது. டை பிரேக்கரில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா அதை 10-5 என வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஃபைனல்: கோகோ காஃப் vs அரீனா சபலென்கா

Coco Gauff

இந்திய நேரப்படி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை நடக்கவுள்ள இந்த இறுதிப் போட்டியில் நிச்சயம் கோகோ காஃபுக்கு பெரும் ஆதரவு இருக்கும். தன் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் ஃபைனலில் விளையாடப்போகும் காஃபுக்கு சபலென்கா ரூபத்தில் மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது. கூடிய விரைவில் நம்பர் 1 அரியணையில் ஏறப்போகும் அவர், இந்த ஆண்டு மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இந்த ஆண்டு நடந்த இன்னொரு ஹார்ட் கோர்ட் தொடரான ஆஸ்திரேலிய ஓப்பனில் அவர் தான் சாம்பியன் பட்டம் வென்றார். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் பிரெஞ்சு ஓப்பன் தொடர்களிலும் அரையிறுதி வரை முன்னேறி அசத்தியிருக்கிறார். மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் இரு வீராங்கனைகள் மோதும் இந்தப் போட்டி நிச்சயம் மிகச் சிறந்த விருந்தாக அமையும்.