carlos alcaraz web
டென்னிஸ்

பிரெஞ்ச் ஓப்பன் சாம்பியன் ஆனார் கார்லோஸ் ஆல்கரஸ்... 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று அசத்தல்!

Viyan

பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் ஆகியிருக்கிறார் ஸ்பெய்னின் இளம் நட்சத்திரம் கார்லோஸ் அல்கரஸ். ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸ் ஸ்வெரவை வீழ்த்தி தன் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் அவர். அந்த இறுதிப் போட்டியின் மூன்று சுற்றுகள் முடிவில் 6-3, 2-6, 5-7 என பின்தங்கியிருந்த நிலையில், கடைசி 2 செட்களையும் 6-1, 6-2 என எளிதாக வென்று அசத்தினார் அவர்.

2024 பிரெஞ்ச் ஓப்பன் தொடரின் இறுதிப் போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான கார்லோஸ் ஆல்கரஸும், நான்காவது நிலை வீரரான அலெக்ஸ் ஸ்வெரவும் தகுதி பெற்றனர். ஸ்வெரவ் தன் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை எதிர்பார்த்திருக்க, தன் முதல் பிரெஞ்ச் ஓப்பன் பட்டத்தைக் குறிவைத்தார் ஆல்கரஸ்.

ஸ்வெரவ் கடந்து வந்த பாதை:

27 வயதான ஸ்வெரவ், இந்த களிமண் தரை சீசனில் மிகச் சிறந்த ஃபார்மில் இருந்தார். இத்தாலியன் ஓப்பன் தொடரை வென்று ரோலண்ட் கேரோஸ் அரங்குக்குள் நுழைந்தவருக்கு முதல் சுற்றிலேயே மிகப் பெரிய சவால் காத்திருந்தது. 14 முறை பிரெஞ்ச் ஓப்பன் பட்டம் வென்ற மகத்தான ஜாம்பவான் ரஃபேல் நடாலுடன் மோதவேண்டியிருந்தது. இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டு அவரை நேர் செட்களில் வீழ்த்தினார் ஸ்வெரவ். இரண்டாவது சுற்றில் அவர் எளிதாக வென்றிருந்தாலும், மூன்றாவது சுற்றிலிருந்தே சவால்களை சந்திக்கத் தொடங்கினார்.

Alexander Zverev

நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர், ஐந்தாவது செட்டின் டை பிரேக்கர் வரை ஸ்வெரவை போராட வைத்தார். அடுத்த சுற்றிலிருந்து ஸ்வெரவ்க்கு எதிராக முன்னணி வீரர்கள் அணிவகுத்தனர். நான்காவது சுற்றில் ஹோல்கர் ரூன், காலிறுதியில் அலெக்ஸ் டி மினோர், அரையிறுதியில் கேஸ்பர் ரூட் ஆகியோரை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறினார் ஸ்வெரவ்.

ஆல்கரஸ் கடந்து வந்த பாதை:

ஆல்கரஸுக்கு ஆரம்ப கட்டப் போட்டிகள் ஓரளவு எளிதாகவே இருந்தது. முதல் ஐந்து போட்டிகளில் அவர் ஒரேயொரு செட்டை மட்டுமே இழந்தார். அந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியிருந்தார் அவர், காலிறுதியில் சிட்ஸிபஸையும் நேர் செட்களில் வீழ்த்தினார்.

carlos alcaraz

அரையிறுதியில் யானிக் சின்னருக்கு எதிராக சில சிரமங்களை சந்தித்தார் ஆல்கரஸ். முதல் செட்டை 2-6 என தோற்ற அவர், இரண்டாவது செட்டில் மீண்டு வந்து 6-3 என வெற்றி பெற்றார். ஆனால் அதே கணக்கில் மூன்றாவது செட்டை அவர் இழந்தார். மிகச் சிறந்த ஃபார்மில் இருந்த சின்னர், எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த இரண்டு செட்களையும் 6-4, 6-3 என வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் அவர்.

போராடி வென்ற ஆக்லரஸ்:

இறுதிப் போட்டி எதிர்பார்த்ததைப் போலவே பரபரப்பாக இருந்தது. முதல் செட்டில் ஸ்வெரவின் ஒரு செர்வீஸை பிரேக் செய்த ஆல்கரஸ் 6-3 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த இரு செட்கள் மிகவும் கடினமாக இருந்தன. இரண்டாவது செட்டை அவர் 2-6 என இழந்தார். மூன்றாவது செட்டில் நன்றாகப் போராடினாலும் 5-7 என தோற்றார். ஸ்வெரவுக்கும் அவர் முதல் கிராண்ட் ஸ்லாமுக்கும் இடையே ஒரேயொரு செட் தான் இருந்தது. ஆனால் ஆல்கர்ஸ் ஒவ்வொரு சாம்பியனைப் போலவும் வெகுண்டெழுந்தார். நான்காவது செட்டில் விஸ்வரூபம் எடுத்த அவர், 6-1 என கைப்பற்றினார். கடைசி செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-2 என அதையும் வென்று தன் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்.

Carlos Alcaraz vs Alexander Zverev

இது கார்லோஸ் ஆல்கரஸின் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாக அமைந்தது. 2022ல் முதல் முறையாக அமெரிக்க ஓப்பனை வென்றிருந்த அவர், கடந்த ஆண்டு விம்பிள்டன் ஃபைனலில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருந்தார். இதன்மூலம் மிக இளம் வயதில் மூன்று வகையிலான தரைகளிலும் (ஹார்ட் கோட், புல்தரை, களிமண் தரை) சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார் ஆல்கரஸ். மேலும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ரேங்கிங்கில் அவர் இப்போது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். இத்தாலியின் யானிக் சின்னர் முதலிடத்தில் இருக்கிறார்.