Victoria Azarenka Alastair Grant
டென்னிஸ்

விம்பிள்டனில் உக்ரைனின் குரல்! பெலாரஸ் வீராங்கனைக்கு ஒலித்த எதிர்ப்பு

என்னைப் பொறுத்தவரை ரஷ்ய வீரர்களுடனும், பெலாரஸ் வீரர்களுடனும் உக்ரைன் வீரர்கள் கைகுலுக்க வேண்டியதில்லை என்று டென்னிஸ் நிர்வாகங்கள் ஒரு பொதுவான நிலைப்பாடை எடுக்கவேண்டும் என்பேன்.

Viyan

இங்கிலாந்தில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா அசரென்காவுடன் கைகுலுக்க மறுத்த நிலையில், ரசிகர்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினார்கள்.

Russia Ukraine War

ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு விளையாட்டு உலகிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தியது. ரஷ்யா கால்பந்து உலகக் கோப்பையில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஃபார்முலா 1ல் இருந்த ஒரு ரஷ்ய டிரைவரின் ஒப்பந்தம் முடிவுக்கு வரப்பட்டது. அதுபோல், டென்னிஸ் அரங்கிலும் ரஷ்ய வீரர்கள் தங்கள் நாட்டின் கொடிக்குக் கீழே விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ரஷ்ய படையெடுப்புக்கு பெலாரஸ் ஆதரவு கொடுத்ததால், பெலாரஸ் வீரர்களுக்கும் இந்த தடைகள் பொறுந்தியது.

பல்வேறு விளையாட்டு வீரர்களும் உக்ரைனுக்கு பல வகைகளில் ஆதரவு தெரிவித்தனர். பலரும் ரஷ்ய வீரர்கள் பற்றிய தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினர். அவ்வகையில் ரஷ்ய மற்றும் பெலாருசிய வீரர்களுடன் கைகுலுக்குவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தார் உக்ரைன் டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விடோலினா.

Ekaterina Alexandrova/ Russia

டென்னிஸ் போட்டிகள் முடிந்ததும் எதிர்த்து விளையாடிய வீரருடன் கைகுலுக்குவது டென்னிஸ் மரபு. வீரர்களுக்கு நடுவே எப்படிப்பட்ட ரைவல்ரி இருந்தாலும், அவர்கள் போட்டிக்குப் பிறகு கைகுலுக்குவார்கள். ஆனால், ரஷ்யாவின் படைகள் உக்ரைனை விட்டு வெளியேறும் வரை தான் எந்த ரஷ்ய & பெலாருசிய வீரர்களுடனும் கைகுலுக்குவதில்லை என்று உறுதியான நிலைப்பாடு எடுத்தார் ஸ்விடோலினா.

டரியா கசட்கினா போன்று ரஷ்ய படையெடுப்பை பற்றி வெளிப்படையாகவே தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்த சில ரஷ்ய வீரர்கள் ஸ்விடோலினாவின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் இந்த ஞாயிற்றுக்கிழமை விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் (ஒற்றையர்) பெலாரஸின் விக்டோரிய அசரென்காவை எதிர்கொண்டார் ஸ்விடோலினா. முன்னாள் நம்பர் 1 வீராங்கனைக்கும், ஒலிம்பிக் சாம்பியனுக்கு இடையிலான இந்தப் போட்டி மிகவும் பரபரப்பாக நடந்தது. மூன்றாவது செட்டின் டை பிரேக்கர் வரையிலுமே சென்றது அந்த ஆட்டம். இறுதியாக 2-6, 6-4, 7-6 (11-9) என போராடி அந்தப் போட்டியை வென்றார் ஸ்விடோலினா.

போட்டி முடிந்ததும் அசரென்காவுடன் கைகுலுக்காமலேயே வெளியேறினார் ஸ்விடோலினா. அப்போது ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் அசரென்காவுக்கு எதிராக கோஷமிடத் தொடங்கியது. கூட்டத்தின் நடத்தையால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளான ஸ்விடோலினா, தன் விரக்தியை வெளிப்படுத்தியவாறே களத்தில் இருந்து வெளியேறினார்.

இந்த நிகழ்வு பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அசரென்கா, "என்னால் ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. அங்கு என்ன நடக்கிறது என்பதை பெரும்பாலானவர்கள் புரிந்துகொண்டார்களா என்று கூட எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இது சரியான நடத்தையே இல்லை. இந்த சூழ்நிலைக்கு நான் என்ன செய்ய முடியும்?" என்று கூறியதோடு ரசிகர்களில் பலரும் மது அருந்தியிருந்ததாகவும் தெரிவித்தார்.

"ரசிகர் கூட்டத்தைப் பற்றி எனக்கு வேறெதுவும் சொல்வதற்கு இல்லை. ரஷ்ய வீரர்களுடனோ, பெலாரஸ் வீரர்களுடனோ கைகுலுக்குவதில்லை என்று ஸ்விடோலினா முடிவெடுத்திருக்கிறார். அவரது முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் என்னால் செய்ய முடியும்? அங்கேயே காத்துக்கொண்டு நின்றிருக்கவேண்டுமா? அங்கு சரியான விஷயம் என்று நான் செய்வதற்கு எதுவுமே இல்லை. அதனால் அவரது முடிவுக்கு மதிப்பு கொடுப்பது என்று முடிவெடுத்திருந்தேன்" என்று கூறினார் விக்டோரியா அசரென்கா.

இது பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்விடோலினாவிடமும் கேட்கப்பட்டது. "என்னைப் பொறுத்தவரை ரஷ்ய வீரர்களுடனும், பெலாரஸ் வீரர்களுடனும் உக்ரைன் வீரர்கள் கைகுலுக்க வேண்டியதில்லை என்று டென்னிஸ் நிர்வாகங்கள் ஒரு பொதுவான நிலைப்பாடை எடுக்கவேண்டும் என்பேன். இது பலருக்கும் புரியவில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருசிலருக்கு என்ன நடக்கிறது என்பது அறவே புரியவில்லை. அதனால் இதுவே சரியான வழி என்று எனக்குத் தோன்றுகிறது" என்று கூறினார் அவர்.