விளையாட்டு

எத்தனையோ அவமானங்கள்; இனி புன்னகைத்துக்கொண்டே இருப்பேன்.. #happybirthdaySerenaWilliams

எத்தனையோ அவமானங்கள்; இனி புன்னகைத்துக்கொண்டே இருப்பேன்.. #happybirthdaySerenaWilliams

Abinaya

” நான் அழுவதில்லை. அப்படி இருப்பது கொஞ்சம் கடினம்தான். என் வாழ்நாள் முழுவதும் போராடி இருக்கிறேன். அப்படி ஒரு போராட்டத்தின் மூலமே எப்படி வெற்றி பெறுவது என்பதையும் கற்றுக்கொண்டேன். இனி நான் புன்னகைத்துக்கொண்டே இருப்பேன் “ – இது செரீனா வில்லியம்ஸ் ஓய்வு பெற்ற தினத்தன்று சொன்ன வார்த்தைகள் இவை..

வில்லியம்ஸ் சகோதரிகள் டென்னீஸில் ஏற்படுத்திய புரட்சிகர வரலாறு உலக வரலாற்றில் முக்கியமானது. நிறவெறியில் இன்றளவும் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவின் கருப்பின குடும்பத்தில், செப்டம்பர் 26, 1981ல் பிறந்த செரீனா வில்லியம்ஸ், டென்னீஸில் கால்யெடுத்து வைத்த அடுத்த 7 ஆண்டுகளில் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை என்ற உச்சத்தை அடைந்தார்.

செரீனா டென்னீஸ் விளையாட துவங்கியதிலிருந்தே அவருக்கு கிடைத்தது வெறும் இனவெறி தாக்குதல் மட்டும் தான். கருவுற்றிருக்கும்போதும் களத்தில் விளையாடுவதை செரீனா நிறுத்தவில்லை. சில சமயம் விளையாட்டு வீரர்கள் ஊடகத்தில் விமர்சனத்துக்கு ஆளாவதுண்டு. ஆனால், செரீனா மீது விழும் ஒவ்வொரு விமர்சனத்தின் கூடவும் இனவெறி தாக்குதலும் சேர்ந்துகொள்ளும்.

விளையாட்டுக்காக விமர்சனத்தை எதிர்க்கொண்டதை விடவும் இனவெறியால் அத்தனை அவமானங்களை சந்தித்தவர் செரீனா. தன் மீது விழும் அனைத்தும் விமர்சனங்களையும் கடந்து அவர் செல்லவில்லை; அனைத்து விமர்சனங்களையும் வென்று சென்றார். 

இனவெறி தாக்குதலுக்குப் பின்வாங்கினால், என்னவாகும் என்ற விளைவு குறித்த விழிப்புணர்வு எப்போதும் செரீனாவிடம் இருந்தது. இனவெறி விமர்சனங்களுக்கும், அவதூறுகளுக்கும் ஒரு அடி பின் வாங்கினால், நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு வரும் ஒரு இனம், மீண்டும் ஒரு அடி முன் எடுத்து வைக்க இன்னும் பல வருடங்கள் ஆகலாம் என்பதை உணர்ந்தவராகவே இருந்தார் செரீனா. 24 வருடப் பயணத்தில் செரீனா போட்டுச் சென்ற பாதை, இனவெறியால் ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது.

சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் தனது கடைசி ரவுண்டை விளையாடி ஓய்வு பெற்றார் செரீனா. எந்த அமெரிக்க ரசிகர்கள் நிறவெறித் தாக்குதலைச் சரமாரியாகக் கொடுத்தார்களோ, அவர்களே செரீனாவின் ஓய்வுக்குக் கண்ணீர் விட்டார்கள்.

ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளை சேர்த்து மொத்தமாக  8 அமெரிக்க ஓபன், 11 ஆஸ்திரேலிய ஓபன், 13 விம்பிள்டன் ஓபன், 5 பிரெஞ்சு ஓபன் என மொத்தம் 39 கிராண்ட்ஸ்லாம் 4 ஒலிம்பிக் கோல்ட் உள்ளிட்ட பட்டங்களுடன் சேர்த்து விமர்சனங்களையும், இனவெறியையும் வென்று காட்டியுள்ளார் செரீனா. 

பிறந்தநாள் வாழ்த்துகள் செரீனா வில்லியம்ஸ் !