விளையாட்டு

"டென்னிஸ் வீரர்கள் முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்!" - ஜாம்பவான் பிஜார்ன் போர்க்

"டென்னிஸ் வீரர்கள் முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்!" - ஜாம்பவான் பிஜார்ன் போர்க்

webteam

"தற்போதுள்ள டென்னிஸ் வீரர்கள் முடிவுகளை எடுக்க கற்றுக் கொள்ள வேண்டும், அது கடினம் தான், ஆனாலும் கற்றுக்கொள்ள வேண்டும்" என 11 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் வீரரான பிஜார்ன் போர்க் அறிவுரை வழங்கியுள்ளார்.

"டென்னிஸ் வீரர்களுக்கு தற்போது வழங்குவது போல முன்பு பெரிய அளவில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதனால் தான் நான் 26 வயதிலேயே ஓய்வு பெற வேண்டியதாகிற்று" என்று கூறியுள்ளார் பிஜார்ன் போர்க்.

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சாம்பியன் போட்டிகள், நாளை தொடங்க உள்ளது. இதன் தகுதிச்சுற்று போட்டிகள் இன்று தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவரும் , முன்னாள் இந்திய டென்னிஸ் வீரருமான விஜய் அமிர்தராஜ் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் 11 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்வீடன் நாட்டின் முன்னாள் ஜாம்பவான் டென்னிஸ் வீரரான பிஜார்ன் போர்க் (bjorn borg) கலந்து கொண்டார்.

அப்போது பேசிய பிஜார்ன் போர்க், "சென்னையில் நல்ல உணவு, நல்ல மனிதர்கள் இருக்கின்றனர். இங்கு மீண்டும் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. என் மனைவி இந்தியா வர வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக இருந்துவந்தது. தற்போது இந்தியா வந்துள்ளது அவர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் திறமையான வீரராக வரவேண்டும் என்றால் களத்திற்கு வெளியேயும், உள்ளேயும் கடுமையாக உழைக்க வேண்டும். டென்னிஸ் மைதானத்தில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும், எப்பொழுதும் ஊக்கத்துடன் இருக்க வேண்டும். தற்போதுள்ள டென்னிஸ் வீரர்கள் முடிவுகளை எடுக்க கற்றுக் கொள்ள வேண்டும், அது கடினம் தான் என்றாலும் கற்றுக்கொள்ள வேண்டும். மைதானத்துக்குள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை வீரர்கள் முடிவு செய்ய வேண்டும். முடிவுகள் தவறோ சரியோ, ஆனால் முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும், 26 வயதுக்கு முன்பாக 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற நிலையில் ஏன் இளம் வயதில் ஓய்வு பெற்றீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "டென்னிஸ் வீரர்களுக்கு தற்போது வழங்குவது போல முன்பு பெரிய அளவில் பாதுகாப்பு என்பது சுத்தமாக இல்லாமல் இருந்தது. எங்கு சென்றாலும் மக்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அதனாலேயே என்னால பெரிய அளவிற்கு டென்னிஸ் மீது கவனம் செலுத்த முடியாமல் போனது. அதனால் மிக குறைந்த வயதில் ஓய்வு பெற்றேன்" என தெரிவித்தார்.

"டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். என் மகன் இங்கே விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானும் என் மகனும் நல்ல உறவில் இருக்கிறோம். அவர் கடுமையாக உழைக்க கூடியவர். தற்போது தான் 19 வயதாகிறது. இன்னும் பல தூரங்கள் அவர் கடக்க வேண்டி இருக்கிறது" என தெரிவித்தார்.

அவருடைய மகன் லியோ போர்க், சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சாம்பியன் போட்டிகளுக்கான தகுதிச்சுற்றில் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.