விளையாட்டு

விராட் கோலியை ஓய்வுப் பெற சொல்லுங்கள்- அப்ரிடியை தொடர்ந்து ஷோயப் அக்தரும் கருத்து

விராட் கோலியை ஓய்வுப் பெற சொல்லுங்கள்- அப்ரிடியை தொடர்ந்து ஷோயப் அக்தரும் கருத்து

webteam

விராட் கோலியை ஓய்வு பெற சொல்லுங்கள் என்று முன்னர் ஷாகித் அப்ரிடி தெரிவித்த நிலையில் ஷோயப் அக்தரும் விராட் கோலி ஓய்வு பெறுவது நல்லது என்று கூறியுள்ளார்.

விராட் கோலியை ஒட்டுமொத்தமாக ஓய்வுபெற சொல்லுங்கள் என்று ஷாகித் அப்ரிடி கூறிய கருத்துக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ஷோயப் அக்தரும் டி20 பார்மேட்டில் விராட் கோலி ஓய்வு பெறுவது நல்லது என்று கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு நவம்பரில் தனது 70ஆவது சதத்தை அடித்த விராட் கோலி, அதற்கு பிறகு சீரான விகிதத்தில் ரன்கள் அடித்தாலும் 3 வருடத்தில் 100 என்னும் இலக்கை அடைய முடியாமல் தொடர்ந்து சொதப்பி வந்தார். இந்நிலையில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட விராட் கோலி அணியிலும் இருந்தும் உட்கார வைக்கப்பட்டு இரண்டு தொடர்களில் பங்கேற்காமல் ஒரு மாதமாக ஓய்வில் இருந்தார். மேலும் அந்த ஒரு மாத காலத்தில் தான் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் பேட்டை தொடவே இல்லை என்றும் வெளிப்படையாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஆசியகோப்பையில் பங்கேற்று ஆடிய விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 3 வருடங்களுக்கு பிறகு தனது 71ஆவது சதத்தை டி20யில் அடித்து அசத்தினார். விராட் கோலியின் பழைய பார்மை எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்கள், அவர் அடுத்தடுத்து சதங்கள் அடித்து சச்சின் சாதனையை நெருங்குவார் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் அணி வீரர் ஷாகித் அப்ரிடி விராட் கோலியின் ரிடைர்ன்மண்ட் குறித்து பேசியது சர்ச்சையானது. அவர் பேசியதில், ”"விராட் விளையாடிய விதத்தில், அவர் தனக்கென ஒரு பெயரை உருவாக்குவதற்கு முன்பு ஆரம்பத்தில் ஆடியது போலான போராட்டம் இருந்தது. அவர் ஒரு சாம்பியன், அவர் ஓய்வு பெறும் ஒரு கட்டம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். ஆனால் அந்த சூழ்நிலையில் , அவர் அணியில் உயரத்தில் இருக்கும் போதே வெளியே செல்ல வேண்டும். அணி தானாக வெளியேற்றுவதற்கு முன்பு இதனை செய்து விட வேண்டும்" என்று அப்ரிடி பேசியிருந்தார்.

அப்ரிடியின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இடையே கண்டனம் எழுந்தது. தொடர்ந்து முன்னாள் இந்திய வீரர் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா விராட் கோலியை விட்டு விடுங்கள் என்று டிவிட்டரில் பதிவிட்டு சாடியிருந்தார்.

இந்நிலையில் அப்ரிடியை தொடர்ந்து ஷொயப் அக்தரும் விராட் கோலியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார். ஷோயப் அக்தர் பேசுகையில், “ ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கோஹ்லி டி20 ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறலாம். மற்ற வடிவங்களில் தனது நீண்ட ஆயுளை நீட்டிக்க அவர் அதைச் செய்யலாம். நான் அவராக இருந்தால் பெரிய இலக்கை நோக்கி அந்த முடிவை தான் எடுத்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.