விளையாட்டு

உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்

உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வேதச கிரிக்கெட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முக்கிய திருவிழா ஒருநாள் உலகக் கோப்பை தொடர். இந்தத் தொடர் இங்கிலாந்து நாட்டில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு தயாராக வேண்டி பல்வேறு கிரிக்கெட் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் உலகக் கோப்பைக்காக இந்திய அணிக்கு புதிய ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஜெர்சியை அறிமுகபடுத்தும் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கிரிக்கெட் வீரர்கள் தோனி, வீராட் கோலி, ரஹானே மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஹர்மன்பீரித் கவுர், ஜெமிமா ரோட்ரிகுயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் புதிய ஜெர்சியை பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான ‘நைக்’ தயாரித்துள்ளது.

இந்த ஜெர்சியில் உட்புரத்தில் இதுவரை இந்தியா வென்றுள்ள மூன்று உலகக் கோப்பையின் தேதிகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதாவது 2 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஒரு டி20 உலகக் கோப்பை வென்ற தேதிகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் அந்தப் போட்டிகளின் ஸ்கோர் விவரம் மற்றும் விளையாடிய மைதானத்தையும் சேர்த்துள்ளனர். மேலும் மூன்று உலகக் கோப்பை வெற்றியை குறிக்கும் வகையில் மூன்று ஸ்டார்களும் உள்ளன. இறுதியில் ‘பிலீட் ப்ளூ’(Bleed Blue) என்னும் வாசகமும் இடம்பெற்றுள்ளது.

மேலும் மறுசூழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் மூலம் புதிய ஜெர்சி தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி மறுசூழற்சி செயப்பட்ட பாட்டில்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இப்புதிய ஜெர்சி குறித்து தோனி மற்றும் வீராட் கோலி கருத்து தெரிவித்துள்ளனர்.  “கடந்த பத்தாண்டுகளில் நான் அணிந்த ஜெர்சிகளில் இதுதான் சிறந்தது. இந்தப் புதிய ஜெர்சியை அணிந்து விளையாட ஆவலாக உள்ளேன்” எனக் கோலி கூறியுள்ளார்.

இதுகுறித்து தோனி, “இந்த ஜெர்சியிலுள்ள மூன்று ஸ்டார்கள் வீரர்களுக்கு இந்திய அணியின் சிறப்பை நினைவூட்டும் வகையில் அமையும். மேலும் இது அணிக்கு நல்ல உத்வேகமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.