இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணியில் இடம் பிடித்து இருந்தார். அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய வருண் 13 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதன் மூலம் இந்திய டி20 அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல்முறையாக இந்திய ஜெர்ஸியில் அறிமுக வீரராக களம் இறங்க ஆவலோடு இருந்த அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் சங்கடத்தை கொடுக்க ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அவருக்கு மாற்றாக ஹைதராபாத் அணிக்காக விளையாடிய மற்றொரு தமிழக வீரரான ‘யார்க்கர்’ நடராஜன் அணியில் இடம் பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடிய போதே வருண் சக்ரவர்த்திக்கு காயம் இருந்ததாகவும், அதனை மறைத்து தொடர்ந்து அவர் விளையாட வைக்கப்பட்டார் என்ற அதிர்ச்சியான தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல் லீக் போட்டிகளில் விளையாடிய போதே அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவரை யார்டு சர்க்கிள் உள்ளே பீல்டிங் செய்ய வைக்கப்பட்டார். அதாவது நீண்ட தூரத்தில் இருந்து அவரால் பந்தினை தூக்கி வீச முடியாது என்பதால் அவர் இவ்வாறு பீல்டிங் செய்யவைக்கப்பட்டார்.
காயத்துடன் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடியது தற்போது இந்திய அணியில் அவர் விளையாடுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடி விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியதால் தான் அவர் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார் என்பதும் மற்றொரு பார்வையாக உள்ளது.