கேரம் போட்டி உலக சாம்பியன் காசிமா PT
விளையாட்டு

உலகக்கோப்பை கேரம் போட்டி: 3 பிரிவுகளிலும் வென்று உலக சாம்பியனாயாக ஜொலித்த தமிழ் ’மகள்’ காசிமா!

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை கேரம் போட்டியில் தமிழக வீராங்கனை காசிமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

PT WEB

அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் மகளிருக்கான தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் காசிமா தங்கம் வென்றுள்ளார். வரும் 21ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து பதக்கத்துடன் காசிமா தாயகம் திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த காசிமா?

சென்னை புதுவண்னாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மெகபூப் பாஷாவின் மகளான காசிமா, உலகக்கோப்பை கேரம் போட்டியில் பட்டம் வென்றுள்ளது, அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

காசிமா

இதுகுறித்து காசிமாவின் தந்தையை தொடர்புகொண்டு கேட்டபோது, வார்த்தையால் வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் இது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

முதலமைச்சர் பாராட்டு..

இதற்கிடையே, உலகக்கோப்பை கேரம் போட்டியில் சாதித்த சென்னை வீராங்கனை காசிமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ”அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது #CarromWorldCup-இல் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

பெருமை கொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான் #DravidianModel-இன் வெற்றி அடங்கியிருக்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பதிவில், “சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கை காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம் - பயிற்சிக்காக ரூ.1.50 லட்சத்தை நாம் வழங்கி வாழ்த்தியிருந்த நிலையில், 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார். தங்கை காசிமாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.