விளையாட்டு

சென்னையின் எஃப்.சியில் தஜிகிஸ்தான் ஜாம்பவான் ஃபதுலோ ஃபதுல்லோ!

சென்னையின் எஃப்.சியில் தஜிகிஸ்தான் ஜாம்பவான் ஃபதுலோ ஃபதுல்லோ!

EllusamyKarthik

ஐ.எஸ்.எல் தொடரில் இரண்டு முறை ஐ.எஸ்.எல் சாம்பியனான சென்னையின் எஃப்.சி. லெஃப்ட், ரைட் என இரண்டிலும் விளையாடும் திறன் படைத்த, அனுபவம் நிறைந்த 30 வயது விங்கரான ஃபதுலோ ஃபதுல்லோவை ஒப்பந்தம் செய்ததன் மூலம், இந்த சீசனுக்கான வீரர்கள் ஒப்பந்தத்தை நிறைவுசெய்தது.

இவர், இந்தியாவில் முதன்முறையாக விளையாட உள்ளார். 

ஆசிய நாடான தஜிகிஸ்தான் தேசிய அணிக்காக அதிக (68) போட்டிகளில் விளையாடிய ஃபதுல்லோவ், சென்னையின் எஃப்.சியில் இணைவதற்கு முன், தஜிகிஸ்தானில் உள்ள பிரபல கிளப்பான எஃப்.கே குஜந்த் கிளப்பில் இருந்தார்.

ஒவ்வொரு அணியும் வெளிநாட்டு வீரர்களுக்கான ஒப்பந்தம் செய்யும்போது அதில் ஒரு ஆசிய வீரரையாவது ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பது ஐ.எஸ்.எல் விதி.  ஃபதுல்லோவை ஒப்பந்தம் செய்ததன் மூலம், சென்னையின் எஃப்.சி அந்த விதிமுறையை நிறைவு செய்துள்ளது.

 "சென்னையின் எஃப்.சி.யைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பல போட்டிகளைப் பார்த்திருக்கிறேன். சென்னையின் எஃப்.சி இந்தியாவில் அருமையான ரசிகர்களைக் கொண்ட பெரிய அணி. எனவே, அந்த அணியில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது எனும்போது, நான் யோசிக்கவே இல்லை. ஒப்பந்தம் செய்துவிட்டேன். சக வீரர்களை சந்திப்பதற்கு ஆவலாக உள்ளேன். சக வீரர்களுடன் சிறப்பான கால்பந்தை வெளிப்படுத்தி, அணி ஐ.எஸ்.எல் சாம்பியனாவதற்கு உறுதுணையாக இருப்பேன் என நம்புகிறேன்" என்று தஜிகிஸ்தானில் உள்ள துஷன்பே நகரில் இருந்து உற்சாகமாக தெரிவித்துள்ளார் ஃபதுல்லோவ்.

"தஜிகிஸ்தான் அணிக்காகவும், கிளப்புக்காகவும் தன்னை நிரூபித்திருக்கிற அனுபவம் வாய்ந்த ஃபதுல்லோவை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். விங்கின் இரண்டு பகுதியிலும், மிட் ஃபீல்டிலும் விளையாடவல்ல திறமைபடைத்தவர் அவர். அணியின் பன்முகத்தன்மைக்கு இவர் பலம் சேர்ப்பார். தஜிகிஸ்தான் அணிக்காக பல பெருமைகளைச் சேர்த்தவர். வெற்றிபெற வேண்டும் என்ற அவரது தாகம், அணிக்கு பெரும் பலம் சேர்க்கும்" என்று சென்னையின் எஃப்.சி–யின் தலைமை பயிற்சியாளர் சபா லஸ்லோ தெரிவித்தார்.

2006 அண்டர் 17 ஆசிய சாம்பியன்ஷிப் தெடரில் தஜிகிஸ்தான் சிரியாவை வீழ்த்தி மூன்றாவது இடம் பிடித்தது. அந்த வெற்றியில் ஃபதுல்லோவ் முக்கிய பங்காற்றினார். 

2007 FIFA அண்டர் 17 உலகக் கோப்பையில், குரூப் சுற்றில் அமெரிக்காவுக்கு எதிராக கோல் அடித்து தஜிகிஸ்தான் அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற காரணகர்த்தாவாகத் திகழ்ந்தார் ஃபதுல்லோவ்.

சீனியர் மட்டத்தில், தஜிகிஸ்தானுக்காக 68 போட்டிகளில் விளையாடி 9 கோல்கள் அடித்துள்ளார். அதில் இரண்டு இந்தியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டவை. 

2008 ஏ.எஃப்.சி சேலஞ்ச் கப் ஃபைனல் மற்றும் 2013 சர்வதேச நட்பு ரீதியிலான போட்டி என இரண்டு முறை இந்தியாவுக்கு எதிராக கோல் அடித்துள்ளார்.  

கிளப் லெவலில் என்று பார்த்தால் எட்டு ஆண்டுகளாக Fc Istiklol கிளப்பில் இருந்துள்ளார். இதில் ஆறு முறை தஜிகிஸ்தானின் டாப் டிவிஷன் லீக் ஜெயிக்க காரணமாக இருந்துள்ளார். ஐந்து முறை தஜிக் கப் டைட்டில் வென்றுள்ளார். அதேபால, அந்த கிளப் இரண்டு முறை ஏ.எஃப்.சி கப் ஃபைனலுக்கு முன்னேறவும் உறுதுணையாக இருந்துள்ளார். அதன்பின், இந்தோனேஷியாவில் உள்ள பெர்செலா லமோங்கன் கிளப்பில் சில காலம் இருந்துவிட்டு 2018–ல் மீண்டும் FC Istiklol கிளப்புக்கு திரும்பினார். அந்த இரண்டு சீசன்களில் தஜிக் லீக், தஜிக் கப் வென்று, பின்னர் உஸ்பெகிஸ்தான் சூப்பர் லீக்கில் FK Buxoro கிளப்பில் சில காலம் விளையாடினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தாயகம் திரும்பிய ஃபதுல்லோவ், எஃப்.கே குஜந்த் அணியில் இருந்தார். கடந்த மாதம்தான் தஜிக் லீக் சீசன் முடிந்தது. அதில் அந்த அணி ரன்னர் அப். 

ஃபதுல்லோவ் நான்கு கோல்கள் அடித்ததோடு மூன்று கோலுக்கு அசிஸ்ட்டும் செய்திருந்தார்.