விளையாட்டு

“நீங்கள் சொன்ன ஊழியருடன் விரைவில் சந்திப்பு நடக்கும்” - சச்சினுக்கு தாஜ் ஹோட்டல் நிர்வாகம் பதில்

“நீங்கள் சொன்ன ஊழியருடன் விரைவில் சந்திப்பு நடக்கும்” - சச்சினுக்கு தாஜ் ஹோட்டல் நிர்வாகம் பதில்

webteam

கிரிக்கெட் தொடர்பாக தனக்கு ஆலோசனை கூறியவரை கண்டறிந்து தாருங்கள் என்று சச்சின் தெரிவித்த விவகாரம் பேசு பொருளாகி உள்ளது. 

எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. அப்படியான ஒரு சந்திப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசியது தற்போது பேசு பொருளாகி உள்ளது. ‘சென்னை டெஸ்ட் தொடர் ஒன்றின் போது தாஜ் கோரமண்டல் ஹோட்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய எல்போ கார்டு பற்றி எனக்கு ஆலோசனை கூறினார். அதற்குப் பின் அதன் வடிவத்தை மாற்றினேன். ஆகவே அவரைச் சந்திக்க ஆசைப்படுகிறேன். அவரைக் கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்’ என்று சச்சின் கோரிக்கை வைத்திருந்தார். 

இந்நிலையில், சென்னை பெரம்பூரை சேர்ந்த ஹோட்டல் ஊழியர் குருபிரசாத், ‘சச்சினை சந்தித்து ஆலோசனை கூறிய தருணம் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். அவரை நான் சில நிமிடங்கள்தான் சந்தித்தேன். அந்தச் அந்திப்பு அறைக்கு வெளியே நடந்தது ’ என்று கூறி இருந்தார்.

சச்சின் தன் வீடியோ பதிவில், ஹோட்டலில் பணிபுரிந்த பணியாளரை சந்தித்ததாகவும், அறைக்கு உள்ளே தான் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் தெரிவித்து இருந்தார். தேநீர் அருந்துவற்காக பணியாளர் ஒருவரை அழைத்தேன். அவர் என் அறைக்கு வந்தார். அவர் என்னிடம் கிரிக்கெட் தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் என்றார். நானும் அதற்கு சரி எனச் சொன்னேன். தான் அணிந்து விளையாடும் முழங்கை உபகரணம் பல ஷாட்டுகள் அடிப்பதற்கு உகந்ததில்லை என அவர் கூறினார். இந்த ஆலோசனையை கூறிய முதல் நபர் அவர் தான். பின்னர் முழங்கை உபகரணத்தை சற்று மாற்றியமைத்து விளையாடினேன் என்று கூறி இருந்தார். 

சச்சின் மற்றும் குரு பிரசாத்தின் கருத்துகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக இருந்ததாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தாஜ் ஹோட்டல் நிர்வாகம், சச்சினின் ட்விட்டிற்கு பதிலளித்தது. அதில், தாஜ் ஹோட்டலின் ஊழியருடான நினைவலைகளை பகிர்ந்ததற்கு நன்றி எனவும், அவருடன் விரைவில் உங்கள் சந்திப்பு நிகழும் எனவும் பதிவிட்டது. ஆனால், அந்தப் பதிவில் ஊழியரின் புகைப்படம் மட்டுமே இருந்ததே தவிர அவரின் பெயரோ மற்ற தகவல்களோ இடம்பெறவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில் உள்ளவர் தான் குருபிரசாத் தானா அது என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. இது குறித்து தெரிந்துகொள்ள தாஜ் ஹோட்டல் நிர்வாகத்தை புதிய தலைமுறை அணுகியது. அதற்கு, அந்த ஊழியர் குறித்த முழு விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படுமென தாஜ் ஹோட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.