கிளைவ் மடாண்டே எக்ஸ் தளம்
T20

147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்: அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை படைத்த ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர்!

Prakash J

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அயர்லாந்து கிரிக்கெட் அணி, அங்குள்ள தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கான டெஸ்ட் போட்டி கடந்த ஜூலை 25ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து பேட் செய்த ஜிம்பாப்வே அணி, தனது முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அவ்வணியில் அதிகபட்சமாக பிரின்ஸ் மாஸ்வாரே 74 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து அணி தரப்பில், மெக்கார்த்தி மற்றும் மெக்பிரைய்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

கிளைவ் மடாண்டே

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய அயர்லாந்து அணி, 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. என்றாலும் ஜிம்பாப்வே அணியைவிட 40 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்த 40 ரன்களும் ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பர் கிளைவ் மடாண்டே என்பவரால் நிகழ்ந்ததுதான் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆம், அயர்லாந்து அணியில் தொடக்க வீரர் பீட்டர் மோர் மட்டும் அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் எல்லாம் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இதையும் படிக்க: ‘லீவு எடுத்துக்கோங்க..’ கம்பெனி CEO சொன்னபோதும் மறுப்பு தெரிவித்த இந்தியர்! வைரலாகும் பதிவு!

இதனால், அந்த அணி ஜிம்பாப்வே எடுத்த ரன்களைக்கூட எடுக்க முடியாமல் சுருண்டிருக்கும். ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான விக்கெட் கீப்பர் கிளைவ் மடாண்டே, 42 ரன்களை பை (Bye) என்ற முறையில் விட்டுக் கொடுத்தார். மேலும் அந்த அணிக்கு வைடு, நோ பால், லெக் பை வாயிலாகவும் உதிரியாக ரன்கள் கிடைத்தன. இப்படி, உதிரியாக மட்டும் அந்த அணி 59 ரன்களைப் பெற்றது.

கிளைவ் மடாண்டே

அதில் விக்கெட் கீப்பர் மட்டும் பை மூலமாக 42 ரன்களை வழங்கியிருப்பதன் மூலம் 90 ஆண்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். டெஸ்ட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக பை ரன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது இந்த போட்டியில்தான். இதற்கு முன்பு இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் லேஸ் ஆமெஸ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 1934ஆம் ஆண்டு 37 பை ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். மேலும், கிளைவ் மடாண்டே இந்தப் போட்டியில் டக் அவுட் முறையில் வீழ்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வீடற்றவர்கள் விரட்டியடிப்பு | வன்முறையில் ஒலிம்பிக் நகரம்; ரசிகர்கள் தவிப்பு! பாரீஸில் நடப்பது என்ன?