கவுதம் கம்பீர் web
T20

Head Coach: நேர்காணலில் கம்பீரை ஓரங்கட்டிய முன்.IND வீரர்! யாரும் எதிர்ப்பார்க்காத Twist! யார் அவர்?

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடைபெற்றுவரும் 2024 டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணலை பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு இன்று நடத்தியது.

தொடக்கத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான ரேஸில் ‘ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் ஃபிளெமிங், ஜஸ்டின் லாங்கர், விவிஎஸ் லக்சுமன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா’ முதலிய முன்னாள் ஜாம்பவான்களின் பெயர்கள் இருந்த நிலையில், கடைசி ஆளாக கவுதம் கம்பீரிடம் வந்து சேர்ந்தது பிசிசிஐ.

gautam gambhir

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக இருந்து கோப்பை வெல்ல காரணமாக இருந்த கவுதம் கம்பீர் ஒருவர் மட்டும் தான் இந்திய தலைமை பயிற்சியாளருக்கு விண்ணப்பித்துள்ளார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், கம்பீருக்கு போட்டியாக இன்னொரு முன்னாள் இந்திய வீரரும் இன்றைய நேர்காணலில் கலந்து கொண்டார் என்றும், அவர் கொடுத்த விளக்க காட்சிகள் பிசிசிஐ-ன் ஆலோசனை குழுவை கவர்ந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கம்பீருக்கு போட்டியாக களமிறங்கிய இன்னொரு வீரர்..

பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (CAC) நடத்திய இன்றைய நேர்காணலில் கவுதம் கம்பீருடன் முன்னாள் இந்திய வீரரான WV ராமனும் கலந்துகொண்டுள்ளார். அவர் கொடுத்த விளக்ககாட்சியை பார்த்த ஆலோசனைக்குழு நிறைவாக உணர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. WV ராமன் இந்திய மகளிர் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

wv raman

அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதற்கு மாறாக, இந்திய அணி ஒரு வெளிநாட்டு பயிற்சியாளரையும் நாளை நேர்காணல் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “கம்பீர் திடமாக நேர்காணலில் கலந்து கொண்டார், ஆனால் ராமனின் விளக்கக்காட்சி மிகவும் சுவாரசியமாகவும் விரிவாகவும் இருந்தது. பிசிசிஐ ஆலோசனைக்குழு நாளை வெளிநாட்டு வேட்பாளர் ஒருவரை நேர்காணல் செய்ய வாய்ப்புள்ளது. கம்பீர் தனது அனுபவத்தின் காரணமாக முன்னிலை பெற்றிருந்தாலும், ராமனின் முழுமையான விளக்கத்தை புறக்கணிக்க முடியாது” என்று அந்த பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார்.

gautam gambhir

இந்த எதிர்பாராத விசயம் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் தேர்வுமுறையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பீரின் வலுவான நற்சான்றிதழ்கள் மற்றும் ராமனின் ஈர்க்கக்கூடிய விளக்கக்காட்சியுடன், இந்திய அணிக்காக அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் CAC ஒரு கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எப்படி இருப்பினும் இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மதிப்புமிக்க பொறுப்பிற்காக முன்னணியில் இருக்கிறார்.