sri lanka cricinfo
T20

டி20 உலகக் கோப்பையில் நீடிக்குமா இலங்கை? நேபாளத்தோடு முக்கிய மோதல்!

Viyan

இந்த உலகக் கோப்பையில் இதுவரை:

நேபாளம்: போட்டி - 1, வெற்றி - 0, தோல்வி - 1, புள்ளிகள் - 0

சிறந்த பேட்ஸ்மேன்: ரோஹித் பாடெல் - 1 போட்டியில் 35 ரன்கள்

சிறந்த பௌலர்: திபேந்திர சிங் ஐரி - 1 போட்டியில் 1 விக்கெட்

நேபாள அணி இதுவரை தாங்கள் விளையாடிய அந்த ஒரு போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக தோல்வியைச் சந்தித்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை நிதானமாக சேஸ் செய்த நெதர்லாந்து 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18.4 ஓவர்களில் இலக்கை சேஸ் செய்தது.

sri lanka

இலங்கை: போட்டிகள் - 2, வெற்றி - 0, தோல்விகள் - 2, புள்ளிகள் - 0

சிறந்த பேட்ஸ்மேன்: பதும் நிசன்கா - 2 போட்டிகளில் 50 ரன்கள்

சிறந்த பௌலர்: நுவான் துசாரா - 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகள்

இலங்கை அணிக்கு இது மறக்கவேண்டிய ஒரு தொடராக மாறிக்கொண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அந்த அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக 124 ரன்கள் சேர்த்தது இலங்கை. கடைசி வரை போராடியிருந்தாலும் வங்கதேச அணி 1 ஓவர் மீதம் வைத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்தப் போட்டியை வென்றது. 2 போட்டிகளிலுமே தோற்றிருக்கும் அந்த அணி, டி பிரிவில் கடைசி இடத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

உலகக் கோப்பையில் நீடிக்குமா இலங்கை?

இலங்கை அணிக்கு இது வாழ்வா சாவா போட்டியாக அமைந்திருக்கிறது. அடுத்த 2 போட்டிகளிலும் வென்றால்தான் அந்த அணியால் குறைந்தபட்சம் 4 புள்ளிகளாவது எடுக்க முடியும். ஏற்கெனவே 6 புள்ளிகள் எடுத்திருக்கும் தென்னாப்பிரிக்கா அடுத்த சுற்றுக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டது.

மீதமிருக்கும் ஒரு இடத்துக்குப் பெரிய போட்டி உருவாகியிருக்கிறது. வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் தலா 1 வெற்றியோடு இருக்கின்றன. இவ்விரு அணிகளும் ஒரு போட்டியில் நேருக்கு நேர் மோதவேண்டி இருப்பதால், ஒரு அணியாவது குறைந்தபட்சம் 4 புள்ளிகள் பெற்றுவிடும். அதனால், இலங்கை எப்படியாவது 4 புள்ளிகள் பெற்றே ஆகவேண்டும். ஒருவேளை இந்தப் போட்டியில் தோற்றால், அவர்களால் 4 புள்ளிகள் பெற முடியாது. அதனால் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழக்கும்.

hasaranga

இலங்கை அணி அவர்களின் இரண்டு பயிற்சிப் போட்டிகளையும் இந்த மைதானத்தில்தான் ஆடியது. இந்த ஆடுகளங்கள் பெரும்பாலும் பந்துவீச்சுக்குத்தான் சாதகமாக இருக்கும். இலங்கை அணி இதுவரை நன்றாகவே பந்துவீசியிருக்கிறது. அதனால் இந்த ஆடுகளங்கள் அவர்களுக்கு ஒத்துழைக்கும். ஆனால், பிரச்சனை பேட்டிங்கில்தான். அந்த அணியால் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்கவே முடியவில்லை. வங்கதேசதுக்கு எதிராக ஓப்பனர் பதும் நிசன்கா 47 ரன்கள் எடுத்தார். அதுதான் இந்த அணியில் ஒரு பேட்ஸ்மேனின் சிறப்பான செயல்பாடு. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அந்த அணிக்குப் பெரிய பங்களிப்பைக் கொடுக்கத் தவறுகின்றனர். டாப் ஆர்டரிலும் குசல் மெண்டிஸும், கமிந்து மெண்டிஸும் பெரிய ஏமாற்றமாகவே இருக்கிறார்கள். அவர்கள் எழுச்சி பெற்றால் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

நேபாளம்: குஷல் பூர்தெல், ஆசிஃப் ஷேக் (விக்கெட் கீப்பர்), அணில் ஷா, ரோஹித் பாடெல் (கேப்டன்), குஷல் மல்லா, திபேந்தர் சிங் ஐரீ, சோம்பால் காமி, குல்சன் ஜா, கரன் கே.சி, சாகர் தாகல், அபினாஷ் பொஹாரா

sri lanka

இலங்கை: பதும் நிசன்கா, குஷல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), கமிந்து மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, சரித் அசலன்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தஷுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா (கேப்டன்), தில்ஷன் மதுஷன்கா, மதீஷா பதிரானா, நுவான் துசாரா.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

நேபாளம் - சோம்பால் காமி: இலங்கை அணியின் பேட்டிங் சோபிக்கத் தவறும் நிலையில், சோம்பால் காமியால் பவர்பிளேவில் தாக்கம் ஏற்படுத்த முடிந்தால், இந்த உலகக் கோப்பையில் நேபாளத்தால் இன்னொரு அப்செட் ஏற்படுத்த முடியும்.

sri lanka fans

இலங்கை - வனிந்து ஹசரங்கா: அணி மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கும்போது, கேப்டன் முன் நின்று அணியை வழிநடத்தியாகவேண்டும். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் அவரால் தாக்கம் ஏற்படுத்த முடியும்.

கணிப்பு: இலங்கை தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்யு வாய்ப்புகள் அதிகம்.