போட்டி எண் 22: கனடா vs பாகிஸ்தான்
குரூப்: ஏ
மைதானம்: நசௌ கவுன்டி இன்டர்நேஷனல் ஸ்டேடியம், நியூ யார்க்
போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 11, இந்திய நேரப்படி இரவு 8 மணி
கனடா: போட்டிகள் - 2, வெற்றி - 1, தோல்வி - 1, புள்ளிகள் - 2
சிறந்த பேட்ஸ்மேன்: நிகோலஸ் கிர்டன் - 2 போட்டிகளில் 100 ரன்கள்
சிறந்த பௌலர்: திலன் ஹேலிகர் - 2 போட்டிகளில் 3 விக்கெட்டுகள்
இந்த உலகக் கோப்பையில் நன்றாகவே விளையாடிக்கொண்டிருக்கிறது கனடா அணி. முதல் போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக 195 ரன்கள் அடித்திருந்தும் பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லாததால் தோற்க நேரிட்டது. ஆனால் அயர்லாந்துக்கு எதிராக நன்றாக ஆடி 12 ரன்களில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் அவர்கள் பந்துவீச்சு நன்றாக எழுச்சி பெற 137 ரன்களை டிஃபண்ட் செய்தது அந்த அணி.
பாகிஸ்தான்: போட்டிகள் - 2, வெற்றி - 0, தோல்விகள் - 2, புள்ளிகள் - 0
சிறந்த பேட்ஸ்மேன்: பாபர் ஆசம் - 2 போட்டிகளில் 57 ரன்கள்
சிறந்த பௌலர்: நஷீம் ஷா - 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகள்
இந்த உலகக் கோப்பையில் தங்களின் வழக்கமான சொதப்பல் ஆட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது இந்த மாடர்ன் பாகிஸ்தான் அணி. முதல் போட்டியிலேயே அமெரிக்காவுக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வியடைந்து பேரதிர்ச்சி கொடுத்தார்கள். இரண்டாவது போட்டியில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெறுவதற்கு ஓரளவு நல்ல வாய்ப்பு இருந்தும், பேட்டிங்கில் சொதப்பி 6 ரன்களில் தோல்வியை சந்தித்தது அந்த அணி. ஒரு புள்ளி கூடப் பெறாமல் ஏ பிரிவில் நான்காவது இடத்தில் இருக்கிறது அந்த அணி.
அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை நிர்ணயிக்க வாய்ப்பு அதிகமுள்ள போட்டி
இந்தப் போட்டிக்கு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் அணிகளைத் தீர்மாணிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. 2 போட்டிகளிலுமே வென்று அமெரிக்க அணி இரண்டாவது இடத்தில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறது. கனடாவோ 2 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதனால் இந்தப் போட்டியில் கனடா அணி வெல்லும்பட்சத்தில் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கக் கூடும். அந்த அணியால் இதற்கு மேல் இந்த சுற்றில் 4 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடியும். அதற்குமே அடுத்து இருக்கும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாகவேண்டும். கனடாவுக்கு எதிராகத் தோற்றுவிட்டால் அந்த வாய்ப்பு கானாமல் போகிடும். அதனால் பாகிஸ்தான் அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியம்.
தொடர்ந்து நியூ யார்க் மைதானத்தில் நடக்கும் போட்டிகள் குறைவான ஸ்கோர்களையே சந்தித்து வருகின்றன. 120 ரன்கள் அடிப்பதே கடினமான விஷயமாக இருக்கிறது. எந்த அணியின் பேட்டிங் ஓரளவு நிதானமாக நின்று ஆடுகிறதோ, அந்த அணிகளே வெற்றி பெறுகின்றன. கனடாவைப் பொறுத்தவரை பேட்டிங் ஓரளவு நன்றாக இருக்கிறது. ஆனால், பந்துவீச்சு கொஞ்சம் சுமார் தான். ஆனால் இந்த ஆடுகளம் அவர்களுக்குக் கைகொடுத்துவிடலாம். அதேசமயம் பாகிஸ்தானின் நட்சத்திர பௌலர்களுக்கு மத்தியில் அவர்கள் பேட்ஸ்மேன்களால் எவ்வளவு பெரிய ஸ்கோர் அடிக்க முடியும் என்பதுதான் அவர்களின் வாய்ப்பை நிர்ணயிக்கும்.
கனடா: ஆரோன் ஜான்சன், நவ்நீத் தலிவால், பர்க்ரீத் சிங், தில்ப்ரீத் பஜ்வா, நிகோலஸ் கிர்டன், ஷ்ரேயாஸ் மொவ்வா (விக்கெட் கீப்பர்), திலன் ஹேலிங்கர், சாட் பின் ஜாஃபர் (கேப்டன்), கலீம் சனா, ஜூனைத் சித்திக்கி, ஜெரமி கார்டன்.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் ஆசம் (கேப்டன்), உஸ்மான் கான், ஃபகர் ஜமான், இமாத் வசீம், ஷதாப் கான், இஃப்திகார் அஹமது, ஷஹீன் அஃப்ரிடி, நஷீம் ஷா, முகமது அமீர், ஹாரிஸ் ராஃப்.
கனடா - நிகோலஸ் கிர்டன்: இரண்டு போட்டிகளிலுமே 51, 49 ரன்கள் என அசத்தலாக பேட்டிங் செய்திருக்கிறார் கிர்டன். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு நன்றாகவே இருக்கிறது என்பதால் கனடாவின் பேட்டிங் ஓரளவு நல்ல ஸ்கோர் எடுக்கவேண்டியது அவசியம். 100 ரன்களையும் 150 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருப்பதால் இவர்மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் - ஃபகர் ஜமான்: பாகிஸ்தான் பேட்டிங் மிகவும் சுமாராக இருக்கிறது. டாப் ஆர்டரில் நல்ல வேகத்தில் ரன் வருவதில்லை. அதனால் மிடில் ஆர்டர் ஃபகர் ஜமானின் வேகம் மிகவும் அவசியம்.
கணிப்பு: பாகிஸ்தான் ஆடும்போது எதைத் தான் கணிக்க முடியும்?!