என்னதான் ஐ.பி.எல், ரசிகர்களுக்கு பிரசாந்த் நீல் படம் போல ஆக்ஷன் நிறைந்தது என்றாலும் அணி நிர்வாகத்தைப் பொறுத்தவரை அது ஒரு சத்யஜித்ரே படம் போன்ற ஸ்லோ பிராசஸ்தான். இஷ்டத்திற்கு 'வெட்டுவோம், தூக்குவோம்' கதையெல்லாம் அணித் தேர்வில் வேலைக்கே ஆகாது. செட்டிலான அணியை அப்படியே டிஸ்டர்ப் செய்யாமல் அதன்போக்கில் விட்டுவிடவேண்டும். அதற்கு சென்னை, மும்பை என இரு பெரும் அணிகள் எடுத்துக்காட்டு என்றாலும் சமீபத்திய உதாரணம் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ். புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியில் கடைசி நேரத்தில் கேப்டன்களை மாற்றி சூடுபட்டுக்கொண்ட அனுபவமோ என்னவோ 2022-ல் தொடங்கி இந்த இரண்டு சீசன்களாக அதிரடி மாற்றங்கள் எல்லாம் செய்யாமல் அதே கோர் டீமோடு தொடர்கிறார்கள். அதனாலேயே இரண்டு முறையும் தொடர்ந்து ப்ளே ஆப்பிற்கும் தகுதி பெற்றது அந்த அணி.
ஏலத்திற்கு முன்னதாய் அவர்கள் ரிலீஸ் செய்த 9 வீரர்களுமே கடந்த சீசனில் அணிக்கு பெரிதாய் பங்களிக்காதவர்கள்தான். பவுலிங்கில் பெரிதாய் சோபிக்காத அவேஷ் கானை ராஜஸ்தானுக்கு கொடுத்துவிட்டு அவர்கள் சும்மா வைத்திருக்கும் படிக்கல்லை ஸ்மார்ட்டாக ட்ரேடில் வாங்கினார்கள். பெஞ்ச்சில் இருந்த ரோமாரியோ ஷெப்பர்டை மும்பை பக்கம் தள்ளிவிட்டார்கள். இத்தனை பேர் போனபின்பும் எஞ்சிய வீரர்களை வைத்தே ப்ளேயிங் லெவனை செட் செய்துவிடமுடியும் என்கிற அளவுக்கு செட்டிலான அணியாக ஏலத்திற்கு முன்பே இருந்தது லக்னோ. அதனால் கையிருப்பும் இருப்பதிலேயே குறைவு லக்னோவிற்குத்தான். 13.15 கோடி.
வீக்காக இருக்கும் பவுலிங்கை சரி செய்ய ஷிவம் மாவியை 6.40 கோடி கொடுத்து எடுத்தார்கள். டி.என்.பி.எல்லில் கலக்கிய தமிழக ஸ்பின்னர் சித்தார்த்தை 2.40 கோடிக்கு வாங்கினார்கள். ஆல்ரவுண்டர்கள் மேல் அதீத காதல் இருக்கும் நிர்வாகம் என்பதால் டேவிட் வில்லி. ஆஷ்டன் டர்னர் இருவரையும் அடிப்படை விலைக்கே பேக்கப்பாக எடுத்தார்கள். மீதி நேரம் எல்லாம் திருவிழாவை வேடிக்கை பார்க்கும் குழந்தை போல வேடிக்கை பார்த்தார்கள். அவ்வளவுதான். ஏலம் ஓவர்.
அணியில் பெரிதாக மாற்றங்களில்லை. ஆனால் அதன் பலம் பலவீனங்களில் இந்த ஓராண்டில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதா? இந்த முறையும் ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற்று ஹாட்ரிக் அடிப்பார்களா?
டி20 சூப்பர்ஸ்டாரான டி காக்கையே கடந்த தடவை ஒருசில ஆட்டங்களில் பெஞ்ச்சில் உட்கார வைக்குமளவிற்கான பேட்டிங் லைன் அப் லக்னோவினுடையது. போதாதென இப்போது படிக்கல்லையும் அணியில் சேர்த்திருக்கிறார்கள். டி காக், படிக்கல், பூரன், ராகுல், கைல் மேயர்ஸ் என வெறித்தனமான டாப் ஆர்டர், தீபக் ஹூடா, படோனி, ஸ்டாய்னிஸ், க்ருணால் என பக்காவான மிடில் ஆர்டர். ராகுலின் வெற்றிடமே தெரியாத அளவிற்கு கடந்த சீசனின் கடைசி சில ஆட்டங்களை ஆடிய பேட்டிங் டீம் இது. இந்த ஆண்டும் அதே ஃபார்மைத் தொடர்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
டி20யைப் பொருத்தவரை ஆல்ரவுண்டர்கள்தான் எல்லாமே. இந்த முறை லக்னோவில்தான் ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கை அதிகம். 25 வீரர்களில் 11 பேர் ஆல்ரவுண்டர்கள். ஓபனிங் பேட்டிங் ஆடணுமா? பண்ணிடலாம், பவர்ப்ளே பவுலிங் போடணுமா? போட்டுடலாம். மிடில் ஓவர்கள்ல ரெண்டு ஓவர் பவுலிங் போட்டு ஓட்டணுமா? அதுவும் பண்ணிடலாம். பவர் ஹிட்டர் வேணுமா? அதுவும் இருக்கு என வாரிசு படத் தயாரிப்பாளர் போல 'அது இருக்கு, இதுவும் இருக்கு' டைப் கூட்டம் இது. லக்னோவின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றப்போகிறவர்கள் இவர்கள்.
பேட்டிங் எந்த அளவிற்கு பலமாக இருக்கிறதோ அதற்கு நேர்மாறாய் இருக்கிறது பவுலிங். கடந்த முறை லக்னோ அணி சார்பில் ஒரு பவுலர் எடுத்த அதிகபட்ச விக்கெட்களே 16 தான். மார்க் வுட் முழு சீசனும் ஆடியிருந்தால் டாப் 10 விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் இருந்திருப்பார். இந்தமுறை நிச்சயம் அவர் பார்த்துக்கொள்வார் என அணி நிர்வாகம் நம்பியிருக்க, அவர் இப்போது தொடரிலிருந்தே விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாய் சேர்க்கப்பட்டிருக்கும் ஷமர் ஜோசப்பிற்கு ஐ.பி.எல் என்ன, இந்திய ஆடுகளங்களே புதிது. வெளிநாட்டு பவுலர்களிலாவது சொல்லிக்கொள்ளும்படியான பெயர்கள் இருக்கின்றன. இந்திய வேகப்பந்துவீச்சில் அப்படி அனுபவம் வாய்ந்த வீரர்களே இல்லை என்பதுதான் பெரிய சிக்கல். இதுவரை எந்த சீசனிலும் முழுதாக ஆடியிராத ஷிவம் மாவிதான் இருப்பதிலேயே அனுபவம் அதிகமிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இந்த அணியின் பவுலிங் லைன் அப்பை. இருக்கும் ஆல்ரவுண்டர்களை வைத்து மிடில் ஓவர் வரை ஓட்டிவிடலாம் என்றாலும் டெத் பவுலிங் போட ஆப்ஷன்கள் இல்லை.
கடந்த சீசனில் காயம் காரணமாக கேப்டன் கே எல் ராகுல் சில ஆட்டங்களில் பங்கேற்கவில்லை. இந்தமுறை விட்டதைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனவரியில் இங்கிலாந்திற்கெதிரான டெஸ்ட் தொடரின்போது மீண்டும் காயமடைந்தார். இரண்டு மாத ஓய்விற்குப் பின் ஐ.பி.எல்லில் களம் காண்கிறார். மறுபக்கம் ஸ்டார் ஆல்ரவுண்டரும் கடந்த சீசனில் லக்னோ அணிக்காக அதிக ரன்கள் அடித்தவருமான ஸ்டாய்னிஸும் கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்திற்கெதிரான டி20 தொடரின்போது காயமடைந்து ஓய்வில் இருக்கிறார். இவர்கள் இருவரும் முழு உடல் தகுதியோடு ஆடும்போது மட்டுமே லக்னோவிற்கு ப்ளே ஆப் வாய்ப்புகள் பிரகாசம்.
கடந்த முறை களத்தில் மட்டுமல்ல, களத்திற்கு வெளியேயும் பரபரப்பாய் இருந்தது லக்னோ. காரணம் கவுதம் கம்பீர். வீரர்களுக்கு இணையாய் மென்டரும் தொடையை தட்டிக்கொண்டு சண்டைக்கு நின்ற காட்சியெல்லாம் கடந்த முறை நடந்தது. ஒரு தலைவனாக கம்பீர் டி20 அணிக்கு செய்யும் பங்களிப்புகள் ஏராளம். இப்போது அவர் மீண்டும் கொல்கத்தா அணிக்கே திரும்பிவிட்ட நிலையில் அவரின் எனர்ஜியை, ஆலோசனைகளை அணி மிஸ் செய்யக்கூடும். இந்த சீசனின் கோச்சாக பதவியேற்றிருக்கும் ஜஸ்டின் லாங்கர் வசமே அந்த வெற்றிடத்தை நிரப்பும் பொறுப்பும்.
இந்த சீசனில் மொத்த கவனமும் ராகுல் மீதுதான் இருக்கப்போகிறது. தொடர் காயங்களுக்குப் பின் ஐ.பி.எல்லில் களம் காண்கிறார். அதுவும் வழக்கமான ஓபனிங் இடத்தைவிட்டுவிட்டு நான்காவது இடத்தில். அந்த பொசிஷனில் அவர் ஆடுவதைப் பொறுத்துத்தான் உலகக்கோப்பை டி20யில் அவருக்கான இடமும் முடிவாகும். எனவே ஐ.பி.எல் பிரஷரைத் தாண்டி உலகக்கோப்பை பிரஷரும் இப்போது அவர் மீது.
தேவ்தத் படிக்கல், குயின்டன் டி காக், தீபக் ஹூடா, கேஎல் ராகுல், ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருணால் பாண்ட்யா, ரவி பிஸ்னோய், நவீன் உல் ஹக், யஷ் தாக்கூர், மோஹ்ஷின் கான்.
ஒருவேளை ஸ்டாய்னிஸ் முழு உடல்தகுதியோடு இல்லாத பட்சத்தில் அந்த இடத்தில் கைல் மேயர்ஸ் களமிறங்கலாம். கோடிகளைக் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தாலும் ஷிவம் மாவி ப்ளேயிங் லெவனைத் தாண்டி தேவைக்கேற்ப இம்பேக்ட் பிளேயராக களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம்.
ஆயுஷ் படோனி : படிக்கல் ப்ளேயிங் லெவனில் ஆடுவதால் படோனி இம்பேக்ட் பிளேயராக களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம். தீபக் ஹூடாவின் கவலைக்குரிய ஃபார்ம் தொடரும்பட்சத்தில் அவருக்கு பதிலாக வேண்டுமானால் ப்ளேயிங் லெவனில் மிடில் ஆர்டரில் களமிறங்கலாம்.
ஷிவம் மாவி : எக்ஸ்ட்ரா பவுலிங் ஆப்ஷன் தேவைப்படும்போது.
கிருஷ்ணப்பா கெளதம் : எதிரணியில் அதிக இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது ஒரு ஆஃப் ஸ்பின்னராக இவர் களமிறங்கக்கூடும்.
அதே அணி. அதே ரிசல்ட் மட்டும் வேண்டாம். இந்தமுறை கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்கிற முனைப்போடு களமிறங்குகிறது லக்னோ அணி. மறுபக்கம் ஒரு கேப்டனாக மட்டுமல்ல, ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் தன் இருப்பை நிரூபிக்க களம் காண்கிறார் கே.எல் ராகுல். இந்த இரு புள்ளிகளும் இணையுமிடத்தில் களை கட்டக் காத்திருக்கிறது ஐ.பி.எல். பொறுத்திருந்து பார்ப்போம்.