t20 ட்விட்டர்
T20

டி20 உலகக் கோப்பை... இடைவெளி மாற்றமும், ஃபார்மட் மாற்றமும் ஏன்?

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் பலமுறை இடைவெளிகள் மாறியிருக்கின்றன, ஃபார்மட்கள் மாறியிருக்கின்றன... அவை ஏன்? ஒரு பார்வை...

Viyan

2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்திருக்கிறது. இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது இந்தியா.

2007ம் ஆண்டு முதல் முறையாக நடந்த இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் மகுடம் சூடியிருக்கிறது. இந்த 17 ஆண்டுகளில் 9 உலகக் கோப்பைகள் நடந்திருக்கின்றன. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தொடரில் பலமுறை இடைவெளிகள் மாறியிருக்கின்றன, ஃபார்மட்கள் மாறியிருக்கின்றன... அவை ஏன்? ஒரு பார்வை...

டி20 உலகக் கோப்பை

ஐசிசி வேர்ல்ட் டி20

2007ம் ஆண்டு முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. இதுவரை நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத விஷயம், இதை ஐசிசி டி20 உலகக் கோப்பை என்றே அழைக்கவில்லை. 'ஐசிசி வேர்ல்ட் டி20' இந்த தொடர் அறிமுகமானது. அப்படியே அழைக்கப்பட்டது. அந்த முதல் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. நான்கு பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டன.

சர்ச்சைகுள்ளான சீடிங்!

அனைவரும் கவனிக்கத் தவறிய மற்றொரு விஷயம், 'சீடிங்' (Seeding). இந்த உலகக் கோப்பையில் இந்த சீடிங் என்பது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது.

ஆனால் இது 2007 முதலே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டி பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணிக்கு டி2 சீடிங்-தான் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்திருந்தது. இருந்தாலும் டி2 சீடிங்கை கடைபிடித்து சூப்பர் 8 சுற்றில் ஏ பிரிவில் இடம்பெற்றது இந்தியா. 4 பிரிவிலிருந்தும் தலா 2 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. அந்த அணிகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் முதலிரு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

AFG

இங்கிலாந்தில் நடந்த 2009 உலகக் கோப்பையில் இதேதான் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் அணிகள் தகுதி பெறுவதில் ஒரு மாற்றம் இருந்தது. முதல் உலகக் கோப்பையில், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய 10 அணிகளும், வேர்ல்ட் கிரிக்கெட் லீகில் முதலிரு இடங்கள் பிடித்த அணிகளும் தகுதிபெற்றன. 2010ல், 9 டெஸ்ட் நாடுகள் மற்றும் நேரடியாக தகுதிபெற்றன. டி20 உலகக் கோப்பை குவாலிஃபயர் நடந்து அதிலிருந்து 3 அணிகள் இத்தொடருக்கு தகுதி பெற்றன. மற்றபடி வேறு எந்த மாற்றமும் இல்லை.

2009ல் உலகக் கோப்பை நடந்த நிலையில், அடுத்த தொடர் 2011ல் நடந்திருக்கவேண்டும். ஆனால், 2010ல் மூன்றாவது டி20 உலகக் கோப்பை நடந்தது. காரணம், 50 ஓவர் உலகக் கோப்பை நடக்கும் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை நடத்தாமல், ஒரு வருடம் முன்பே நடத்துவது என்று முடிவு செய்திருந்தது ஐசிசி. அதனால் கரீபிய தீவுகளில் அந்த தொடர் 2010ம் ஆண்டே நடத்தப்பட்டது. 2008ஐ போலவே 10 டெஸ்ட் அணிகளும், குவாலிஃபயரில் இருந்து 2 அணிகளும் தகுதி பெற்றன. இலங்கையில் நடந்த 2012 உலகக் கோப்பையில் 2010 போலவே அனைத்தும் கடைபிடிக்கப்பட்டது.

AFG, AUS

ஃபார்மட் மாற்றம்...

2014ல் இந்த ஃபார்மட்கள் மாறின. இம்முறை மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. 10 முழுநேர ஐசிசி உறுப்பினர் நாடுகள் நேரடியாக இத்தொடருக்குத் தகுதி பெற்றன. மற்ற 6 அணிகள் தகுதிச் சுற்றின் மூலம் தகுதி பெற்றன. இந்த 16 அணிகளையும் 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாகப் பிரிக்காமல் வேறு வகையில் இந்த தொடரை நடத்தியது ஐசிசி.

ஐசிசி டி20 சாம்பியன்ஷிப் ரேங்கிங்கில் முதல் 8 இடங்கள் பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 10 சுற்றுக்குத் தகுதி பெற்றன. மீதமிருந்த 8 அணிகள் நான்கு அணிகள் கொண்ட 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணிகள் 5 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. அதில் முதலிரு இடங்கள் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 2016ம் ஆண்டு இதே ஃபார்மட் கடைபிடிக்கப்பட்டது.

அடுத்த டி20 உலகக் கோப்பை 2018ம் ஆண்டு நடந்திருக்க வேண்டும். ஆனால் அந்தத் தொடர் ரத்து செய்யப்பட்டது. இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், அனைத்து உறுப்பினர் நாடுகளும் பொருளாதார காரணங்களில் அதிக பைலேட்டரல் தொடர்களில் விளையாடுவதை விரும்பியதால், ஐசிசி-யால் உலகக் கோப்பையை நடத்த முடியவில்லை என்பதே உண்மையாகக் கருதப்படுகிறது.

England

இந்நிலையில் அடுத்த டி20 உலகக் கோப்பை 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று வந்ததால் எந்த விளையாட்டு தொடர்களையும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அதை 2021ல் நடத்த முடிவு செய்தது ஐசிசி. அதற்கு ஆஸ்திரேலிய அரசு ஒத்துழைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு கடுமையான விதிகள் விதிக்கப்பட்டிருந்ததால் அந்த உலகக் கோப்பை இந்தியாவுக்கு மாற்றப்பட்டது.

முதன்முறையாக நடந்த மாற்றம்!

கடைசியில் இந்தியாவிலும் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்க, உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்தப்பட்டது. இதுதான் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை என்ற பெயரில் ஐசிசி நடத்திய தொடர். அதுமட்டுமல்லாமல் அதிக அணிகள் டி20 ஃபார்மட்டில் ஆடவேண்டும் என்று கருதிய ஐசிசி, இதை 20 அணிகள் கொண்ட தொடராக மாற்றியது.

டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருந்த அணிகள் நேரடியாகத் தகுதி பெற, குவாலிஃபயர் மூலம் மற்ற 10 அணிகள் முடிவு செய்யப்பட்டன. இந்த 20 அணிகளில் தரவரிசைப்படி முதல் 8 இடங்களில் இருந்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மற்ற 8 இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்றில் மோதின. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்கள் பெற்ற அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் 12ல் 6 அணிகள் இரு பிரிவிலும் இடம்பெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்கள் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.கொரோனாவால் 2021ல் உலகக் கோப்பை நடந்திருந்தாலும், திட்டமிட்டபடியே 2022ம் ஆண்டும் அது நடத்தப்பட்டது. முந்தைய தொடர் ஆஸ்திரேலியாவிலிருந்து மாற்றப்பட்டதால், இத்தொடர் அங்கேயே நடத்தப்பட்டது. மற்றபடி 2021 தொடரில் நடந்த ஃபார்மட்டிலேயே இந்தத் தொடரும் நடத்தப்பட்டது.

South africa

2024ல்-தான் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது ஐசிசி. சூப்பர் 12 சுற்றுக்குப் பதிலாக சூப்பர் 8 மீண்டும் திரும்பியது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த இத்தொடரில் எந்த அணியும் நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் அனைத்து அணிகளுமே முதல் சுற்றை ஆடின. 5 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் முதலிரு இடங்கள் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. அடுத்த உலகக் கோப்பை 2026ம் ஆண்டு இந்தியாவிலும் இலங்கையிலும் நடக்கிறது.