ராபின் மின்ஸ் Twitter
T20

IPL-லில் களமிறங்கும் முதல் பழங்குடியின வீரர் ராபின் மின்ஸ் - யார் இவர்?

வறுமையில் வாடும் திறமையான கிரிக்கெட் வீரர்களை வாரியணைத்து நட்சத்திரங்களாக மாற்றுவதற்கு சிறந்த களமாக திகழ்கிறது ஐபிஎல். இந்தாண்டும் அது போல் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

webteam

செய்தியாளர் - சேஷகிரி

---------

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராபின் மின்ஸ் என்ற அதிகம் அறியப்படாத விக்கெட் கீப்பர் பேட்டரை 3 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது குஜராத் டைட்டன்ஸ். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் களமிறங்கும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை ராபின் மின்ஸ் பெறுகிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ராபின் மின்சை வாங்க போட்டியிட்ட நிலையில் இறுதியில் அவரை குஜராத் டைட்டன்ஸ் தட்டிச்சென்று விட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்லா (GUMLA) என்ற பின்தங்கிய பகுதியில் இருந்து வந்த 21வயதான ராபின் மின்ஸ் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். இவர் ஒரு இடது கை கிரோன் பொல்லார்டு என வர்ணிக்கிறார் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா. ராபின் மின்சின் தந்தை ராஞ்சி விமான நிலையத்தில் பாதுகாவலராக உள்ளார். சீரழிந்த நிலையில் கிடக்கும் மண் வீடுதான் இவரது ஒரே சொத்து. இதே போல சென்னை அணி தேர்வு செய்துள்ள சமீர் ரிஸ்வியும் ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்தான்.

ரிஸ்வியை எட்டரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கும் என ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை என கூறுகிறார் அவரது சித்தப்பா தன்கீப் அக்தர். இத்தொகையை கொண்டு சமீர் ரிஸ்வி தனது தந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும்... நல்ல வீடு வாங்க முடியும் என்றும் தன்கீப் அக்தர் கூறியுள்ளார்.

சமீர் ரிஸ்வி

ரிஸ்வியின் தந்தை மூளை ரத்தக்கசிவால் கடந்த 3 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்து வருவதும் இதனால் வருமானம் இன்றி அக்குடும்பம் பரிதவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

சமீர் ரிஸ்வி, ராபின் மின்ஸ்

வறுமையில் வாடினாலும் திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து முன்னேறி கோடிகளை சம்பாதிப்பதுடன் கோடிக்கணக்கானோரின் கனவு நாயகனாக மாறவும் களம் அமைத்து தருகிறது ஐபிஎல். ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால் என ஐபிஎல்லை களமாக வைத்து ஜொலிக்கும் வீரர்கள் பட்டியலில் ராபின் மின்சும் சமீர் ரிஸ்வியும் இணைவார்களா என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.