kkr pt web
T20

IPL ஆக்‌ஷன்: கேப்டன், கீப்பர், முன்னணி பேஸர்... கொல்கத்தாவுக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன!

ஐபிஎல் ஜுரம் தொடங்கிவிட்டது. மெகா ஏலம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டதைத் தொடர்ந்து, 2025 சீசனுக்கான மெகா ஏலம் இந்த வாரம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கிறது.

Viyan

ஒவ்வொரு அணியும் புதியதொரு டீமை உருவாக்க முயற்சி செய்வார்கள் என்பதால், இந்த ஏலத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த கட்டுரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

kkr

ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன் உள்ளிட்ட 6 வீரர்களை ரீடெய்ன் செய்திருக்கிறது:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களின் முழு ரிடன்ஷன் வாய்ப்புகளையும் பயன்படுத்தியிருக்கிறது. ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங் என 6 வீரர்களை ரீடெய்ன் செய்திருக்கிறது கேகேஆர். தக்கவைத்த வீரர்களின் பட்டியலை அறிவித்தபோது ஹர்ஷித் ராணா, ரமன்தீப் ஆகிய இருவருமே இந்திய அணிக்கு ஆடியிருக்கவில்லை என்பதால், இருவருமே அன்கேப்ட் வீரர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த 6 வீரர்களைத் தக்கவைக்க அந்த அணி 69 கோடி செலவளித்திருக்கிறது. அதனால் ஏலத்தில் அவர்களுக்கு 59 கோடி ரூபாய் மீதமிருக்கும். 6 வீரர்களை தக்கவைத்திருப்பதால் ஏலத்தின்போது அவர்களால் RTM கார்டைப் பயன்படுத்த முடியாது.

ஜாஸ் பட்லரை தேர்வு செய்ய வாய்ப்பு:

கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை விடுவித்திருப்பதால், அவர்களுக்கு கேப்டன் தேவைப்படுகிறது. இந்த ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தவிர்த்து வெகுசில தேர்வுகளே இருக்கின்றன. அவர்களை வாங்க அதிக தொகை செலவு செய்யவேண்டியிருக்கும் என்பதால் அவர்கள் அங்கு அதிக முதலீடு செய்யமாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு விக்கெட் கீப்பரும் தேவைப்படுகிறது. அதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக அவர்கள் ஜாஸ் பட்லரைத் தேர்வு செய்யலாம். கேப்டனும் கிடைத்துவிடும், கீப்பரும் கிடைத்துவிடும்.

KKR

ஐபிஎல் தொடரில் அதிக சதங்களை அடித்துள்ள இரண்டாவது வீரர்:

அதுமட்டுமல்லாமல், சுனில் நரைனுடன் கடந்த சீசனின் அதிரடி தொடக்கத்தைத் தொடரும் வகையில் ஒரு மிரட்டல் ஓப்பனரும் கிடைத்துவிடும். சொல்லப்போனால், இது ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள். ஆனால், அது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் கோலிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் (7 சதங்கள்) இருப்பது பட்லர்தான். ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த ஓப்பனர்களில் ஒருவரான அவருக்கு நிச்சயம் அதிக போட்டி இருக்கும். அதனால் கொல்கத்தா இங்கு பெரும் தொகை செலவிட வேண்டியிருக்கலாம். ஆனால், முந்தைய சீசன்களில் கேப்டன்சி மாற்றம், அதிக கீப்பர் மாற்றங்கள் என நிறைய சந்தித்திருக்கும் அந்த அணி, அதையெல்லாம் தவிர்க்க, பட்லரில் அதிக முதலீடு செய்வது நல்லது.

இந்திய பேட்ஸ்மேன்களை வாங்க வாய்ப்பு:

2 ஓப்பனர்கள் போக, மேலும் 2 பேட்ஸ்மேன்கள் அந்த அணிக்குத் தேவைப்படுவார்கள். ரஸல், ரிங்கு, ரமன்தீப் என அவர்களின் மிடில் ஆர்டர் மிகவும் பலமாக இருப்பதால், அந்த இரண்டுமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இருப்பது அவசியம். பட்லரை அவர்கள் வாங்கினால், அவர் மூன்றாவது வெளிநாட்டு வீரராக இருப்பார். மீதமொரு இடத்துக்கு அவர்கள் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை வாங்க நினைப்பார்கள். அதனால் அந்த இரண்டு பேட்டிங் பொசிஷன்களுக்கும் நைட்ரைடர்ஸ் அணி இந்திய பேட்ஸ்மேன்களை வாங்கவே வாய்ப்பு அதிகம். வெங்கடேஷ் ஐயர், நித்திஷ் ராணா, அங்க்ரிஷ் ரகுவன்ஷி என கடந்த சீசன் கலக்கிய வீரர்களில் குறைந்தபட்சம் ஒருவரையாவது அவர்கள் மீண்டும் ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்வார்கள்.

KKR

பவர்பிளேவில் வைபவ் அரோரா பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும்:

பந்துவீச்சைப் பொறுத்தவரை மேற்கூறியதுபோல் அவர்கள் ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை வாங்குவார்கள். மிட்செல் ஸ்டார்க் ஓரளவு குறைந்த தொகைக்குப் போனால் அவர் மீண்டும் நடப்பு சாம்பியன்களோடு இணைய வாய்ப்பு அதிகம். ஆனால், பல அணிகளும் அவரை வாங்க ஆசைப்படுவார்கள் என்பதால் நைட்ரைடர்ஸ் அணி இன்னும் சில பௌலர்கள் மீதும் கவனம் செலுத்துவது நல்லது. போக, இன்னொரு இந்திய வேகபப்ந்துவீச்சாளரும் அவர்கள் பிளேயிங் லெவனை முழுமையாக்கத் தேவைப்படும். கடந்த சீசன் சிறப்பாக செயல்பட்ட வைபவ் அரோரா சரியான தேர்வாக இருப்பார். பவர்பிளேவில் அவர் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும்.

ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், அல்லா கசன்ஃபார், சேத்தன் சகாரியா, அனுகூல் ராய், சூயஷ் ஷர்மா போன்ற வீரர்களை அவர்கள் மீண்டும் குறைந்த தொகைக்கு வாங்கக்கூடும்.