பஞ்சாப் கிங்ஸ் டிரேட் மூலம் எந்த வீரரையும் வாங்கவோ அனுப்பவோ செய்யவில்லை
இந்த ஏலத்துக்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி 7 வீரர்களை ரிலீஸ் செய்திருக்கிறது. அதில் குறிப்பிடத்தகுந்த ஒரு வீரர் என்றால் அது தமிழக ஆல்ரவுண்டர் ஷாரூக் கான் தான். 9 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீரரை ரிலீஸ் செய்திருக்கிறது அந்த அணி. இன்னொரு குறிப்பிடத்தக்க இந்திய வீரர் என்றால், 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட முன்னாள் அண்டர் 19 வீரர் ராஜ் அங்கத் பவா. இவர்கள் போக 3 இந்திய வீரர்களை வெளியேற்றியிருக்கும் அந்த அணி, பனுகா ராஜபக்சா, மேத்யூ ஷார்ட் என இரு வெளிநாட்டு வீரர்களையும் வெளியே அனுப்பியிருக்கிறது.
ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் - 7
ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள் - 17
நிரப்பவேண்டிய மொத்த ஸ்லாட்கள் - 8
நிரப்பவேண்டிய வெளிநாட்டு ஸ்லாட்கள் - 2
ஏலத்துக்கு மீதமிருக்கும் தொகை - 29.1 கோடி ரூபாய்
1. ஷிகர் தவான்
2. ஜானி பேர்ஸ்டோ*
3. பிரப்சிம்ரன் சிங்
4. லியாம் லிவிங்ஸ்டன்*
5.
6. ஜித்தேஷ் ஷர்மா
7. சாம் கரண்*
8. ஹர்ப்ரீத் பிரார்
9. ராகுல் சஹார்
10. நாதன் எல்லிஸ்* / ககிஸோ ரபாடா*
11. ஆர்ஷ்தீப் சிங்
இம்பேக்ட் பிளேயர்: ரிஷி தவான் / வித்வாத் கவரப்பா
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரிய தலைவலி எதுவும் இல்லை. கடந்த சீசனில் ஆடிய அணியை கிட்டத்தட்ட அப்படியே ரீடெய்ன் செய்திருக்கிறார்கள். ரிலீஸ் செய்திருக்கும் ஷாரூக் கானின் இடத்தில் மட்டும் ஒரு இடைவெளி இருக்கிறது. ஆனால் அந்த இடைவெளியை அவர்களால் இந்திய வீரர் ஒருவரை வைத்தே நிரப்ப முடியும். ஆனால் அதற்கு ஏற்ற ஒரு பெரிய பெயர் இந்த ஏலப் பட்டியலில் இல்லை. இந்த ஸ்லாட்டுக்கு எல்லா அணிகளுமே ஷாரூக் கானை தான் டார்கெட் செய்வார்கள். ஆனால் அவரை ரிலீஸ் செய்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் எப்படியும் அவரை மீண்டும் வாங்க வாய்ப்பில்லை. அதனால் டொமஸ்டிக் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கும் வீரர்களை அவர்கள் டார்கெட் செய்வார்கள். சமீர் ரிஸ்வி போன்ற ஒரு வீரர் அவர்களின் டார்கெட் லிஸ்ட்டில் இருக்கலாம். உத்திர பிரதேச பிரீமியர் லீகில் அவர் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அதேபோல் ஃபினிஷராக கலக்கிக்கொண்டிருக்கும் ஷிவம் தூபேவும் அவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கலாம். அதனால், அவர்கள் இந்த இரு வீரர்களில் ஒருவரை வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
2 வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்டை அந்த அணி எப்படி நிரப்பப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். சாம் கரண், ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு பேக் அப் வீரர்கள் வாங்கலாம். இல்லை பெரும் தொகை இருப்பதால், அதைப் பயன்படுத்தி பெரிய வீரர்களை வாங்கலாம். உதாரணமாக டிராவிஸ் ஹெட், ஜாஷ் இங்லிஸ், ஜெரால்ட் கொட்சியா போன்ற வீரர்களை அவர்கள் டார்கெட் செய்யலாம். ஹெட் வரும் பட்சத்தில் அவர் பேர்ஸ்டோவுக்கு பதில் டாப் ஆர்டரில் ஆடலாம். அதேபோல் கொட்சியா போன்ற ஒரு வீரர் எல்லிஸ் இடத்தில் ஆடலாம். ரபாடாவின் ஃபிட்னஸ் எப்போதும் பிரச்சனைக்குள்ளாகும் என்பதால், ஒரு கூடுதல் பேக் இருப்பது நல்லது தான்.
அதுமட்டுமல்லாமல், லியாம் லிவிங்ஸ்டனின் சுழற்பந்துவீச்சை அந்த அணி அதிகம் நம்புகிறது எனும்பட்சத்தில், ஹர்ப்ரீத் பிராருக்கான அந்த இடத்தில் ஒரு இந்திய முன்னணி வேகப்பந்துவீச்சாளரை வாங்கி வைக்கலாம். பெரும் தொகை இருப்பதால், ஷர்துல் தாக்கூர், ஹர்ஷல் படேல் ஆகியோர் பெயர் வரும்போது பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் அவர்களுக்கு முயற்சி செய்து பார்க்கும் என்றே தெரிகிறது.