2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்றும் நாளையும் நடக்கிறது. இரண்டு நாள்கள் நடக்கும் மெகா ஏலத்தில் மொற்றம் 574 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு அணியும் புதிய டீமை கட்டமைக்க முயற்சிப்பார்கள். இந்தக் கட்டுரையில் முன்னாள் சாம்பியன் குஜாரத் டைட்டன்ஸ் அணி இந்த ஏலத்தில் என்ன செய்ய முயற்சிக்கும் என்பதை, அவர்கள் என்னென்ன திட்டங்களோடு வரலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.
குஜராத் டைட்டன்ஸ் அணி ரஷீத் கானுக்கு அதிகபட்சமாக 18 ரூபாய் கொடுத்து தக்கவைத்திருக்கிறது. கேப்டன் சுப்மன் கில்லுக்கு 16.5 கோடி கொடுத்திருக்கிறது. தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 6.5 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டிருக்கிறார். அன்கேப்ட் வீரர்கள் ராகுல் தெவேதியா, ஷாரூக் கான் இருவரும் தலா 4 கோடி ரூபாய்க்கு ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த 5 வீரர்களுக்கும் சேர்த்து அந்த அணி 51 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. அந்த அணிக்கு கைவசம் 1 RTM கார்ட் மீதமிருக்கிறது.
குஜராத் அணி கையில் 69 கோடி இருப்பதால் மிகச் சிறப்பாக அவர்கள் டீமைக் கட்டமைக்கலாம். பெரிய ஸ்டார் வீரர்கள் அவ்வளவாக அந்த அணிக்குத் தேவைப்படமாட்டார்கள். அதேசமயம் தரமான ஒரு 5 ஸ்டார்களை தலா 10 கோடிக்கு எடுத்து ஒரு சிறப்பான அணியை உருவாக்க முடியும்.
அந்த அணியின் தலையாய தேவை ஒரு கீப்பரை வாங்குவது. அந்த அணி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கீப்பர்களை முயற்சி செய்து பார்த்திருக்கிறது. ஆனால், யாரும் அவர்களுக்கு நல்ல பங்களிப்பைக் கொடுக்கவில்லை. அதனால் அவர்கள் இங்கு நல்ல முதலீடு செய்ய முயற்சிக்கவேண்டும். சாய் சுதர்ஷன் நம்பர் 3 இடத்தில் நன்றாக ஆடியதால், ஒரு வெளிநாட்டு விக்கெட் கீப்பரை ஓப்பனராக எடுக்கலாம். ஜாஸ் பட்லர், ஃபில் சால்ட், குவின்டன் டி காக் போன்றவர்கள் மிகச் சிறந்த தேர்வுகளாக இருப்பார்கள். பட்லர் கேப்டன்சி ஆப்ஷனாகவும் பார்க்கப்படுவதால் அவர் அதீத தொகைக்குப் போகலாம். சால்ட் இருக்கும் ஃபார்முக்கு அவரும் கூட அதிக தொகைக்குப் போகக்கூடும். அதனால் டி காக் சரியான தேர்வாக இருக்கலாம். அப்படி இல்லையெனில், ரஹ்மானுல்லா குர்பாஸ் கூட அந்த அணிக்கு ஏற்ற வீரராக இருப்பார். ஏற்கெனவே ரஷீத் கான், நூர் அஹமது என அந்த அணி ஆப்கானிஸ்தான் வீரர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தியிருக்கிறது. அதனால் குர்பாஸை அவர்கள் பிரதான இலக்காக குறிவைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
பேட்டிங்கில் அந்த அணிக்கு 4 மற்றும் 5வது இடங்களுக்கும் நல்ல வீரர்கள் தேவைப்படும். அதில் ஒரு இடத்தை அவர்கள் வெளிநாட்டு வீரர்கள் கொண்டு நிரப்பலாம். தங்கள் மிடில் ஆர்டரின் முதுகெலும்பாக விளங்கிய டேவிட் மில்லரை அவர்கள் மீண்டும் தக்கவைப்பது நல்ல விஷயமாக இருக்கும். ஆனால், அவர்களுக்கு என்ன பிரச்சனை வரும் என்றால், அவர்களால் டாப் ஆர்டரில் ஒரு ஆல்ரவுண்டரை களமிறக்க முடியாமல் போகலாம். அந்த சூழ்நிலையை சரிசெய்ய ஷாரூக் மற்றும் தெவேதியா இருவரையும் சற்று ப்ரமோட் செய்துவிட்டு, 7வது இடத்துக்கு பேட்டிங் செய்யக்கூடிய ஒரு வெளிநாட்டு பௌலரை வாங்கி பேலன்ஸைக் கொண்டுவரலாம். சாம் கரண், மார்கோ யான்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்றவர்கள் அந்த இடத்துக்கு நன்றாகப் பொறுந்திப் போவார்கள்.
குஜராத் டைட்டன்ஸ் இந்த முறை ஒரு முக்கியமான விஷயத்தை சரிசெய்யவேண்டும். அவர்கள் பந்துவீச்சைப் பொறுத்தவரை அடிக்கடி காம்பினேஷன்களை மாற்றினார்கள். ஒரு போட்டியில் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் ஆடுவார், ஒரு போட்டியில் அவருக்குப் பதில் வெளிநாட்டு ஸ்பின்னர் ஒருவர் வருவார், இன்னொரு போட்டியில் அவர் இடத்தில் வெளிநாட்டு ஆல்ரவுண்டர் வருவார். அதை அவர்கள் சரிசெய்தே ஆகவேண்டும். மேற்கூரியதுபோல் வெளிநாட்டு வீரர்களை வாங்கினால் அவர்களுக்கு அது சரியாகப் பொருந்தும்.
வாஷிங்டன் சுந்தர் போல் அனைத்து போட்டிகளிலும் ஆடக்கூடிய ஒரு இந்திய ஸ்பின் ஆல்ரவுண்டரை வாங்கும்போது அவர்களுக்கு அந்த பிரச்சனை இருக்காது. அவருக்கு நிச்சயம் அதிக போட்டி இருக்கும். அடுத்ததாக ஒரு முன்னணி இந்திய வேகப்பந்துவீச்சாளர். எப்படியும் அவர்கள் மீண்டும் ஷமியை வாங்க முயற்சிப்பார்கள். கைவசம் இருக்கும் RTM கார்டை அவர்கள் அவருக்கோ மில்லருக்கோ பயன்படுத்த வாய்ப்பு அதிகம்.
இந்த வீரர்களை வாங்கிய பிறகும்கூட அவர்களுக்கு நிச்சயம் ஓரளவு கையில் காசு இருக்கும். அதில் அவர்கள் எப்போதும் எதிர்பார்ப்பதுபோல் அதிக ஆப்ஷன்களை வாங்கலாம். அபினவ் மனோஹர், சந்தீப் வாரியர், விஜய் சங்கர், ஷிவம் மாவி ஆகியோரை அவர்களால் நிச்சயம் மீண்டும் வாங்க முடியும்.