ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கேப்டனாகவும், தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்ட ரிக்கி பாண்டிங்கின் செல்ல பிள்ளையாகவும் இருந்தவர்தான் ரிஷப் பண்ட். ரிக்கி பாண்டிங் மற்றும் ரிஷப் பண்ட் கூட்டணியில் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. ஆனால் எதிர்பாராவிதமாக மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்று கோப்பையை நழுவவிட்டது.
ஆனால் அந்த ஐபிஎல் தொடருக்கு பிறகுதான் டெல்லி அணி மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களுக்கே அதிகமானது. 2022-ம் ஆண்டு இறுதியில் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய போதும் கூட, பண்ட்டின் டெல்லி ஜெர்சியை பெவிலியன் மீது வைத்திருந்த அணி நிர்வாகம், கடினமான சூழலின் போது கூட பண்ட்டை விட்டுக்கொடுக்கமால் துணையாக நின்றது.
ரிஷப் பண்ட்டின் திறமை மீது நம்பிக்கை இழக்காத ரிக்கி பாண்டிங், அவர் விபத்திலிருந்து மீண்டு வந்தபிறகு கூட நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை அவரிடமே ஒப்படைத்தார். அவரும் கேப்டன் பதவியுடன் விக்கெட் கீப்பிங்கையும் செய்து அணியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கினார்.
டெல்லி அணி நிர்வாகம் மற்றும் ரிக்கி பாண்டிங்கின் ஆதரவால் வலுவாக மீண்டுவந்த ரிஷப் பண்ட், 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டு உலகக்கோப்பையுடன் நாடு திரும்பினார்.
இப்படி தன்னுடைய கிரிக்கெட் கெரியரில் சிறந்த தருணத்தில் இருக்கும் ரிஷப் பண்ட்டை, டெல்லி கேபிடல்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரில் தக்கவைக்காமல் வெளியேற்றியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.
2025 ஐபிஎல் தொடருக்கான ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் அவர்களுக்கான 6 வீரர்களை தக்கவைத்துள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் வெளியேற்றப்பட்டு, முதல் வீரராக அக்சர் பட்டேல் தக்கவைக்கப்பட்டுள்ளார். இதற்கெல்லாம் என்ன காரணம்? எதனால் பண்ட் வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிடிஐ-ன் அறிக்கையின் படி, ஹேமாங் பதானியை தலைமைப் பயிற்சியாளராகவும், வேணுகோபால் ராவை டெல்லி கேபிடல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராகவும் நியமித்ததன் மூலம் ரிஷப் பண்ட் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. அதே சமயத்தில் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் கட்டுப்பாடானது இணை உரிமையாளரான GMR குழுமத்திற்கு சென்றிருப்பதாகவும், அவர்கள் பண்ட்டின் அதிகாரங்களை கட்டுப்படுத்தியதில் அவருக்கு விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது.
அதவாது JSW குழுமத்திற்கும், GMR குழுமத்திற்கும் இடையே டெல்லி கேபிடல்ஸின் 50-50 உரிமைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டதன் காரணமாக, ஒவ்வொரு உரிமையாளரும் இரண்டு வருட சுழற்சியில் தங்களது உரிமையை இயக்குகிறார்கள். அதன்படி 2025 மற்றும் 2026 உரிமை சுழற்சியானது GMR குழுமத்தின் வழிகாட்டுதலின் கீழ் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனடிப்படையில் 2016-ம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்ட ரிஷப் பண்ட்டை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி அக்சர் பட்டேலுக்கு வழங்க திட்டமிட்டதாக செய்திகள் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் உரிமை மாற்றத்திற்கு பிறகு டெல்லி அணியில் ஏழு வருடங்களாக அவர்களின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங்கை மாற்ற DC முடிவு செய்தது. அத்துடன் அணியின் கிரிக்கெட் இயக்குநராக இருந்த சவுரவ் கங்குலியும் மாற்றப்பட்டார்.
இந்த மாற்றங்கள்தான் பண்ட்தை அதிருப்தியடையச் செய்தன, அதனால் அணியிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு செல்வதை தேடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
ஏற்கனவே ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணிக்கு செல்வார் என்று கூறப்படும் நிலையில், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரிக்கி பாண்டிங்கும் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரையும் ஏலத்தில் தேர்ந்தெடுப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் அதிக தொகை இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட் மீண்டும் ரிக்கி பாண்டிங்குடன் இணையவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.