virat, dravid, rohit pt web
T20

ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி சாதித்தவை என்னென்ன தெரியுமா?

Angeshwar G

9 ஆவது உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் தென்னாப்ரிக்காவும் மோதிய நிலையில், பரபரப்பான இறுதிக் கட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தியுள்ளது இந்திய அணி. ஆட்டத்தின் நாயகனாக விராட் கோலியும், தொடரின் நாயகனாக பும்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இருபது ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி இரண்டாவது முறையாக வென்றுள்ள நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட், உலகக் கோப்பையுடன் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றுள்ளார்.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவி வகித்து வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் பல்வேறு அணிகளுடனான போட்டியில் இந்தியா பல வெற்றிகளை பெற்றிருந்தது. அவரது தலைமையின் கீழ் வரையறுக்கப்பட்ட (limited-over) ஓவர்களைக் கொண்ட தொடர்களில், அது உள்நாட்டில் நடந்தாலும், வெளிநாட்டில் நடந்தாலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா இருவரது இலக்கும் தெளிவானதாக இருந்தன. அவர்கள் அக்ரஸிவ் கிரிக்கெட்டையே விரும்பினர். விக்கெட்டை தக்க வைக்க வேண்டும் என்பதைத் தாண்டி, பவர்ப்ளேவில் எதிரணியின் பீல்டிங்கை உபயோகித்து அதிரடியாக ரன்களை சேர்ப்பதுதான் அவர்களின் முக்கிய திட்டமாக இருந்தது.

RahulDravid

இந்த காலக்கட்டத்தில், 17 இருதரப்பு தொடர்களில் 14ல் வெற்றி பெற்றது, அதில் முக்கியமானதாக கருதப்படுவது, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகள்.

பயிற்சியாளர் ராகுலின் தலைமையில், 76 ஒருநாள் போட்டிகளில் 51 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 66 டி20 போட்டிகளில் 43 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 43 டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆக, இவரது தலைமையில் இந்திய அணி அனைத்து வகையான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது என்பது உண்மை.

ஆனாலும், 2023- ல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றில் இறுதிப்போட்டியில் தோல்வியை கண்டது.

இது பெரும் விமர்சனங்களை எழுப்பிய சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தனது கடைசி உலகக் கோப்பை தொடரை வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாகவும், வீரராகவும் இருந்தபோது செய்ய முடியாததை பயிற்சியாளராக இருந்து உலகக் கோப்பையை வென்று அசத்திய டிராவிட்டிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

ராகுல் டிராவிட்டை கொண்டாடிய இந்திய கிரக்கெட் அணி

டி20 உலகக்கோப்பையை பெற்ற பின்னர் ராகுல் டிராவிட்டிடம் கோப்பையை கொடுத்தபோது, வீரர்களுடன் இணைந்து தனது ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி மகிழ்ந்தார். இவர், பயிற்சியாளராக இந்திய அணிக்கு 19 வயது உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று கொடுத்திருந்த நிலையில், தற்போது டி20 உலகக்கோப்பையும் பெற்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.