IPL play offs race File image
T20

‘இதெல்லாம் நடந்தா சென்னை, மும்பை லீக் சுற்றோட போக வேண்டியதுதான்’.. பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுவிட்ட நிலையில், மீதமுள்ள 3 இடங்களுக்கு 7 அணிகள் களத்தில் இருந்தன. தற்போது இந்த ரேஸிலிருந்து பஞ்சாப் வெளியேறிவிட்ட நிலையில், சென்னை, லக்னோ, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 6 அணிகளின் வாய்ப்புகளை பார்க்கலாம்.

சங்கீதா

லீக் சுற்றில் இன்று மற்றும் நாளை நடக்கும் 4 போட்டிகளே 6 அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தவுள்ளன.

1. சென்னை சூப்பர் கிங்ஸ்:

பிளே ஆஃப் ரேஸிலிருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்ட டெல்லி அணியை அதன் சொந்த மைதானத்தில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை அணி இன்று எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே சென்னை அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு உறுதியாக 17 புள்ளிகளுடன் தகுதிபெற முடியும். தோல்வியுறும் பட்சத்தில், 15 புள்ளிகள் இருந்தாலும், லக்னோ, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே சென்னை அணி பிளே ஆஃப்-க்கு செல்வதற்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

CSK

மேலும், அடுத்து வரும் போட்டிகளில் லக்னோ, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகளில், ஒரு அணி தோல்வியுற்றாலும், சென்னை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பிருக்கிறது. அப்படியில்லாமல், இந்த மூன்று அணிகளும் வெற்றிபெறும் பட்சத்தில், லீக் சுற்றுடன் சென்னை அணி கிளம்ப வேண்டி வரும். அந்த அணிக்கு தற்போதும் 93.8 சதவிகிதம் வாய்ப்புள்ளது.

2. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

சென்னை அணியைப் போன்ற நிலைமைதான் லக்னோ அணிக்கும். இந்த அணிக்கும் தற்போது 93.8 சதவிகிதம் வாய்ப்பிருந்தாலும், சென்னை, மும்பை, பெங்களூரு அணிகளின் வெற்றி, தோல்வி வாய்ப்பை பொறுத்தே பிளே ஆஃப்-க்கு செல்ல முடியும். சென்னையை போன்று அல்லாமல், லக்னோ அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புள்ள கொல்கத்தா அணியை தனது கடைசி லீக் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது சற்று பலவீனம் தான். அதுவும் கொல்கத்தா அணியின் சொந்த மைதானத்தில் மோதுகிறது.

LSG

எனினும், கொல்கத்தா அணியை காட்டிலும் (-0.256), லக்னோ அணி +0.304 என்ற நெட் ரன் ரேட்டுடன் 3 புள்ளிகள் அதிகமாக உள்ளது சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பஞ்சாப் கிங்ஸ் அணி போன்று இல்லாமல், எஞ்சிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில், ஹைதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது. 4-வது இடத்தில் இருந்தாலும், பிளே ஆஃப்-க்கு தகுதிபெற்றுவிட்ட பலமான அணியான குஜராத் அணியை, பெங்களூரு அணி நாளை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் அந்த அணி வெற்றிபெற வேண்டும்.

RCB

இல்லையெனும் பட்சத்தில், பெங்களூருக்கு பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கலாகி விடும். ஏனெனில், சென்னை, லக்னோ, மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா என ஐந்து அணிகள் பிளே ஆஃப் ரேஸில் இன்னும் இருக்கின்றன. அதிலும், லீக் சுற்றுகள் ராஜஸ்தான் அணிக்கு (+0.148) முடிந்துவிட்டாலும், நெட் ரன் ரேட்டில் கிட்டத்தட்ட பெங்களூருடன் (+0.180) சம அளவில் உள்ளது. இந்த அணிக்கு இன்னும் 75 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது.

4. ராஜஸ்தான் ராயல்ஸ்

குஜராத்தைப் போன்று வலுவான அணியாக இருந்த ராஜஸ்தான், கடைசி சில லீக் போட்டிகளில் மோசமான தோல்வியை தழுவியது. இதனாலேயே, அந்த அணி டாப்பில் இருந்து புள்ளிப்பட்டியலில் கீழே இறங்கினாலும், நேற்று பஞ்சாப் அணியுடனான த்ரில் வெற்றியை அடுத்து, 14 புள்ளிகளுடன் இன்னும் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புடன் உள்ளது.

RR

அந்த அணி கடைசி போட்டியையும் முடித்துவிட்ட நிலையில், இன்றும், நாளையும் நடக்கும் 4 போட்டிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே பிளே ஆஃப்-க்கு தகுதிபெறும். குறிப்பாக, மும்பை மற்றும் பெங்களூருவின் வெற்றி, தோல்வி வாய்ப்புதான் முக்கியமானது. 14 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்தாலும், ராஜஸ்தான் அணி +0.148 என்ற நல்ல ரெட் ரன் ரேட்டுடன் பலமாக உள்ளது. இதனால், இன்னும் 25 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது.

5. மும்பை இந்தியன்ஸ்

நாளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய கட்டயாத்தில் மும்பை அணி உள்ளது. ஆரம்பக்கட்டத்தில் பல தோல்விகளை சந்தித்த மும்பை அணி, கடைசியாக நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து தனது பிளே ஆஃப் வாய்ப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கிக் கொண்டது.

MI

இன்னும், பெங்களூரு அணியைப் போன்றே 75 சதவிகிதம் மும்பை அணிக்கு வாய்ப்பிருக்கிறது. ஹைதராபாத் அணியை வீழ்த்தும் பட்சத்தில், 16 புள்ளிகளுடன் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திலிருந்து முன்னேறி விடும். எனினும், சென்னை, லக்னோ, பெங்களூரு அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே மும்பைக்கு வாய்ப்புண்டு. ஏனெனில், -0.128 என்ற நெட் ரன் ரேட் அந்த அணிக்கு மிகவும் பலவீனமாக உள்ளது.

6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

12 புள்ளிகளுடன், -0.256 என்ற நெட் ரன் ரேட் அடிப்படையில், 7-வது இடத்தில் மிகவும் பலவீனமாக கொல்கத்தா அணி உள்ளது. இன்று நடக்கும் தனது கடைசி லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில், அதிக நெட் ரன் ரேட் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும். அப்படியிருந்தாலும், சென்னை, லக்னோ, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளின் வெற்றி, தோல்வியை கவனிக்க வேண்டியுள்ளது. 12.5 சதவிகிதம் வாய்ப்புள்ளது.

KKR

வாய்ப்பிருந்து கோட்டைவிட்ட பஞ்சாப் அணியும், ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேறிவிட்டன. இருந்தாலும், டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள், சென்னை, மும்பையின் பிளே ஆஃப் வாய்ப்பை நிலைகுலைய வைக்க வாய்ப்புண்டு என்பதால், அடுத்து வரும் நான்கு போட்டிகளும் மிகவும் பரபரப்பாக இருக்கும்.