விவிஎஸ் லக்‌ஷ்மண், கம்பீர் எக்ஸ் தளம்
T20

Head Coach|அடுத்த ஜிம்பாப்வே தொடருக்கு விவிஎஸ் லக்‌ஷ்மண்; பிசிசிஐக்கு கண்டிஷன் போட்ட கவுதம் கம்பீர்!

Prakash J

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடைபெற்றுவரும் 2024 டி20 உலகக்கோப்பையுடன் முடிவு பெற உள்ளது. இதையடுத்து, அடுத்த தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதற்காக சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில், கம்பீருக்கு போட்டியாக முன்னாள் இந்திய வீரரான WV ராமனும் கலந்துகொண்டது பேசுபொருளானது.

gautam gambhir

இவர், இந்திய மகளிர் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தவர். இதையடுத்து, நேர்காணலின்போது அவர் காட்டிய விளக்கக் காட்சி மிகவும் சுவாரசியமாகவும் விரிவாகவும் இருந்ததாக பிசிசிஐ வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. எனினும், கம்பீர் தனது அனுபவத்தின் காரணமாக அந்த மதிப்புமிக்க பொறுப்பிற்காக முன்னிலையில் இருக்கிறார். இதனால் அவரையே பிசிசிஐ தேர்வு செய்யும் எனவும், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: ஆந்திரா| ஆட்டம் ஆரம்பம்.. ஜெகன் கட்டிய அரண்மனை பங்களா.. குறிவைத்த சந்திரபாபு நாயுடு! பழிக்குப்பழியா?

ஒருவேளை கவுதம் கம்பீர், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தேர்வுசெய்யப்பட்டாலும்கூட அவர் உலகக்கோப்பைக்குப் பிறகு நடைபெறவிருக்கும் ஜிம்பாப்வேக்கான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதில் வி.வி.எஸ்.லஷ்மண்தான் ஜிம்பாப்வே தொடருக்கான பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட இருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

vvs laxman

அதேநேரத்தில், ஜிம்பாப்வே தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக தொடர்களில் பங்கேற்க உள்ளது. அந்த தொடரில் இருந்துதான் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது. கவுதம் கம்பீர் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள்தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: 24 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்.. வடகொரிய அதிபரைச் சந்தித்த புதின்.. உற்றுநோக்கும் அமெரிக்கா!

அதாவது அவர் முழு பலத்துடன்கூடிய இந்திய அணிதான் எந்த தொடரிலும் விளையாட வேண்டும் என உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்காகவே டெஸ்ட் அணி, ஒருநாள் அணி, டி20 அணி என மூன்று வெவ்வேறு அணிகள் உருவாக்கப்பட வேண்டும் என அவர் கூறியிருப்பதாகவும், ஆதலாலேயே இரண்டாம்கட்ட அணி ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவதை அவர் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

காம்பீர், பிசிசிஐ

டி20 உலகக் கோப்பை முடிந்து இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஓய்வு எடுப்பார்கள் என்பதால் ஜிம்பாப்வே தொடருக்கு இளம்வீரர்கள் கொண்ட அணியே செல்ல உள்ளது. அதை கம்பீர் விரும்பாததாலேயே வி.வி.எஸ்.லஷ்மண் அந்த தொடருக்கு மட்டும் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இன்னும் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ளாத கவுதம் கம்பீர் அதற்குள்ளேயே விதிமுறைகளை விதித்து வருவதால், பிசிசிஐக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் ஒரு ஃபயராக இருக்கப்போகிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: மக்களவை| தற்காலிக சபாநாயகராக ஒடிசா பாஜக எம்பி பர்த் ருஹரி மஹ்தப் நியமனம்!