நடப்பு 2024 ஐபிஎல் தொடர் வரும் மே 26-ம் தேதி முடிவடையவிருக்கும் நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் 2-ம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது. எந்த 11 வீரர்களை இந்திய அணி உலகக்கோப்பைக்குள் எடுத்துச்செல்லப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவரும் நிலையில், பல்வேறு முன்னாள் வீரர்கள் அவர்களுடைய 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், பினிசர் மற்றும் வேகப்பந்துவீச்சாளருக்கான இடங்கள் தான் இந்திய அணிக்கு பிரச்னையாக இருந்துவரும் நிலையில், அந்த இடத்தில் எந்த வீரர்களை இந்திய அணி தேர்ந்தெடுக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரம் இந்திய அணி தேர்வுக்குழு 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்ந்தெடுக்கும் என கூறப்படும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக் ஹர்திக் பாண்டியாவுக்கு தன்னுடைய இந்திய அணியில் வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த கிளப் ப்ரேரி ஃபயர் பாட்காஸ்டில் கலந்துகொண்டு பேசிய சேவாக்கிடம், 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்ந்தெடுக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது தன்னுடைய பிளேயிங் 11 வீரர்களை பிக் செய்த விரேந்திர சேவாக், அதிர்ச்சியளிக்கும் வகையில் ஹர்திக் பாண்டியாவின் பெயரை நீக்கிவிட்டு சொன்னது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
விரேந்திர சேவாக்கின் டி20 உலகக்கோப்பை இந்திய அணி: “யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், ரிங்கு சிங் அல்லது ஷிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், சந்தீப் சர்மா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா” என்ற 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியை சேவாக் குறிப்பிட்டார்.
ஹர்திக் பாண்டியாவின் பெயர் இடம்பெறாததைக் கண்டு ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாகன் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அதற்கு பதிலளித்த முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக், "ஹர்திக் பாண்டியா 15 வீரர்களில் இருக்க வேண்டும். ஆனால் ஆடும் 11 வீரர்களை கேட்டதால் நான் பதில் சொன்னேன்” என்று கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன்சி மாற்றத்திற்கு பிறகு ரசிகர்களின் அதிகப்படியான வெறுப்பை எதிர்கொண்டுவரும் ஹர்திக் பாண்டியா, அழுத்தம் காரணமாக அவருடைய பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்.