2024 ஐபிஎல் தொடரில் நல்ல பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் ஆர்சிபி அணி, எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அதனை பாதுகாக்க முடியாத அளவிலேயேதான் பந்துவீச்சை வைத்திருக்கிறது. 16 வருட ஐபிஎல் வரலாற்றில் அந்த அணிக்கு இருந்த பெரிய பிரச்னையான பந்துவீச்சு கவலை என்பது, நடப்பு ஐபிஎல் வருடத்தில் உச்சத்திற்கே சென்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 287 ரன்களை விட்டுக்கொடுத்த ஆர்சிபி அணி, ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை பதிவுசெய்த அணியாக மாறியது. அதேபோல பவர்பிளே என கூறப்படும் முதல் 6 ஓவர்களில் 7 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கும் ஆர்சிபி அணி, 11 ரன்ரேட்டை வாரிவழங்கும் ஒரு அணியாக இருந்துவருகிறது. அதனாலேயே ஆர்சிபி அணிக்கு எதிராக ஒவ்வொரு அணிகளும் அதிகபட்ச டோட்டலை பதிவுசெய்து வருகின்றன.
7 போட்டிகளில் விளையாடி வெறும் 1 போட்டியில் மட்டுமே வென்று மோசமாக செயல்பட்டுவரும் ஆர்சிபி அணியின் கேப்டன், பயிற்சியாளர் என அனைவரும் பல்வேறு விமர்சனங்களை பெற்றுவருகின்றனர். அணியை கலைத்துவிட்டு வேறு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை வாங்குங்கள் என கூறப்படும் நிலையில், ஆர்சிபி அணியின் தோல்வி குறித்து பேசியிருக்கும் விரேந்திர சேவாக் ஆர்சிபி நிர்வாகத்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆர்சிபி அணியின் அணி நிர்வாகத்தை குற்றஞ்சாட்டிய வீரேந்திர சேவாக், “ ஆர்சிபி அணியில் 12 முதல் 15 இந்திய வீரர்கள் இருக்கின்றனர், வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரையில் 10 வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் ஸ்டாஃப்கள் அனைவருமே வெளிநாட்டினர்களாக இருப்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது என நினைக்கிறேன். அங்குள்ள பாதிபேருக்கு ஆங்கிலம் கூட புரிய வாய்ப்பில்லை, தோல்வியின் போது யார் அவர்களிடம் சென்று அதிகநேரம் செலவிடுவார்கள்? யார் அவர்களை ஊக்குவிப்பார்கள்? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
கேப்டன், கோச் என அனைவரும் வெளிநாட்டினராக இருந்தால் வீரர்களுக்கு சரியான ஆறுதலை வழங்கமுடியாது. கேப்டன் டுபிளெசி முன் வீரர்கள் அனைவரும் வெறுமையாக செல்வதை பார்க்கமுடிகிறது. கேப்டன் இந்தியராக இருந்தால் மனதில் இருப்பதை உங்களால் பகிர்ந்துகொள்ள முடியும். ஆனால் நீங்கள் ஒரு வெளிநாட்டு வீரரிடம் அதைச் செய்தால், அடுத்த ஆட்டத்தில் விளையாடும் 11-ல் இருந்து வெளியேறும் நிலைகூட ஏற்படலாம். RCB அணிக்கு குறைந்தபட்சம் 2-3 இந்திய துணை ஊழியர்கள் தேவை” என்று கிறிக்பஸ் உடன் தெரிவித்துள்ளார்.