சேவாக், ரிங்கு சிங் file image
T20

”ரிங்கு சிங்-ஏ நினைச்சாலும்... இனி அதுபோல் அடிக்க முடியாது!” - சேவாக் சொல்வது என்ன?

Prakash J

இந்த ஐபிஎல் சீசனில் கிரிக்கெட் வல்லுநர்கள் பலராலும் மிகவும் பேசப்படும் வீரராக கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் இருக்கிறார். அதற்கு காரணம் குஜராத்துக்கு எதிரான லீக் போட்டி ஒன்றில் ரிங்கு சிங், 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி 5 பந்துகளையும் சிக்ஸருக்குத் தூக்கி அணியை வெற்றிபெற வைத்தது. இதன்மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்ததுடன், கிரிக்கெட் வல்லுநர்களின் பாராட்டு மழையிலும் நனைந்தார் ரிங்கு.

Rinku Singh

இந்த சாதனைக்குப்பின் அவரைப்பற்றிய இணையத் தேடல்கள் அதிகரிக்கத் தொடங்கியதுடன், ஊடகங்களிலும் அவர் பேசுபொருளானார். கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு கொல்கத்தா அணிக்கு வெற்றியைத் தேடித் தந்ததன் மூலம், தோனி பாணியில் சிறந்த ஃபினிஷர் என்ற பட்டியலிலும் ரிங்கு சிங் இடம்பெற்றார். இந்நிலையில் “ரிங்கு சிங்கே, இதுபோல் வருங்காலங்களில் கடைசி ஓவரில் 5 அல்லது 6 சிக்ஸர்களை அடிக்க முடியாது” என்கின்றனர் கிரிக்கெட் ஆளுமைகள்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக், “தோனி மைதானத்துக்குள் களமிறங்கியபிறகு, அவர் எப்படியும் அணியை வெற்றிபெற வைத்துவிடுவார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் ஏற்படும். அதுபோல் 1990-களில் சச்சின் இருக்கும்வரை அவர் இறங்கிவிட்டால் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நிலையைத்தான் தற்போது ரிங்கு சிங் உருவாக்கி இருக்கிறார். கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்தது வரலாற்றில் இதற்குமுன் நடந்ததில்லை. என்றாலும், இந்த சாதனையும்கூட வருங்காலத்தில் முறியடிக்கப்படலாம்.

வீரேந்திர சேவாக்

ஆனால், வருங்காலங்களில் இதுபோன்ற சாதனையை ரிங்கு சிங்கால்கூடச் செய்ய முடியாது. அதற்கு அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும். மேலும், அந்த ஓவரை அல்சாரி ஜோசப் வீசியிருந்தால்கூட, 5 சிக்ஸர்கள் அடிக்க முடியாது என்பதை ரிங்கு சிங்கே அறிந்திருப்பார்.

இதற்குமுன் உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தரப் பிரதேச அணிக்காக பலமுறை வலைப்பயிற்சியில் அவரது நண்பர் யாஷ் தயாளை எதிர்கொண்ட அனுபவத்தின் காரணமாகவே, அந்த அழுத்தமான சூழ்நிலையிலும் ரிங்கு சிங்கால் நல்ல மனநிலையுடன் இந்த சாதனையைச் செய்ய முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.