இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே அது இரண்டு அணி ரசிகர்களை தாண்டி, ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கிரிக்கெட் திருவிழாதான். அந்தளவு அனைத்து உலகநாடுகளும் அதிகப்படியாக விரும்பும் ஒரு மோதலாகவே இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் இதுவரை அமைந்துள்ளன.
அதனால்தான் கடந்த 2022 டி20 உலகக்கோப்பையின்போது கூட இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் 90,293 எண்ணிக்கையிலான ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. 2023 ஒருநாள் உலகக்கோப்பையின்போது கிட்டத்தட்ட 1 லட்சம் மக்கள் அரங்கத்தை அதிரச்செய்தனர்.
இந்தியா பாகிஸ்தான் மோதுகிறது என்றாலே இரண்டு அணி வீரர்களும் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி தங்கள் நாட்டின் வெற்றிக்காக போராடுவார்கள். ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை விட பாகிஸ்தான் அதிக வெற்றிகளை வைத்திருந்தாலும், உலகக்கோப்பை என வந்துவிட்டால் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோற்றதே இல்லை என்ற சாதனையை தொடர்ந்து வந்தது.
ஆனால் 2021 வரை தொடர்ந்து வந்த மோசமான ரெக்கார்டை, 2021 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி பதிலடி கொடுத்தது.
அந்த போட்டி தான் இந்திய அணிக்கு சோதனையாக அமைந்தது என்றால், 2022 டி20 உலகக்கோப்பை போட்டியிலும் 31 ரன்களுக்கு 4 விக்கெட்டை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, இந்தியாவிற்கு மீண்டுமொரு தோல்வியை பரிசளிக்க ஆயத்தமானது. ஆனால் வெல்லவே முடியாத இடத்திலிருந்த போட்டியை தன்னுடைய அபாரமான ஆட்டத்தின் மூலம் மீட்டு எடுத்துவந்த விராட் கோலி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்தியாவை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
ஹாரிஸ் ராஃப்க்கு எதிராக விராட் கோலி அடித்த ஸ்டிரைட் சிக்சர், கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெரும்பாலானோருக்கு இன்றுவரை பிடித்தமான ஷாட்டாக இருந்துவருகிறது. விராட் கோலி அவுட்டாகமல் இருந்த எந்த போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோற்றதேயில்லை, மாறாக 2021 உலகக்கோப்பையில் விராட் கோலி அவுட்டான போட்டியில் மட்டுமே இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.
டி20 உலகக்கோப்பையில் இதுவரை 5 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியிருக்கும் விராட் கோலி, அதில் 78*, 36*, 55*, 57, 82* என நான்குமுறை அரைசதங்களை பதிவுசெய்துள்ளார்.
2021 டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி அவுட்டான நிலையில், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக தங்களுடைய முதல் உலகக்கோப்பை போட்டியை வென்றது.
பாகிஸ்தான் vs விராட் கோலி:
போட்டிகள் - 5
ரன்கள் - 308
சராசரி - 308
சதம்/ அரைசதம் - 0/4
நாட் அவுட் - 4
சிறந்த ஸ்கோர் - 82* vs 2022 T20 WC