உலகக்கோப்பையை வென்ற கையோடு, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து அறிவித்தனர். இது, அவர்களது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பரபரப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி நேற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. முக்கிய கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், விராட் கோலியின் நிதானமான ஆட்டம் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அவர் 59 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் போட்டி முடிந்து ஆட்ட நாயகன் விருது கோலிக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து பேசிய கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாகவும், இளம் வீரர்களின் வாய்ப்பை கருதி ஓய்வு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி 4,188 ரன்கள் அடித்துள்ளார். இவற்றில் 1 சதம் மற்றும் 38 அரை சதங்களும் அடங்கும்.
விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்த சில மணி நேரத்தில், கேப்டன் ரோகித் சர்மாவும் ஓய்வு முடிவை பற்றி தெரிவித்தார். போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இதுவே தனது இறுதிப்போட்டி எனவும், ஓய்வு பெற இதனை விட சிறந்த தருணம் இல்லை எனவும் கூறினார். டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 159 போட்டிகளில் விளையாடி 4,321 ரன்கள் அடித்துள்ளார். இவற்றில் 5 சதம் மற்றும் 32 அரை சதங்களும் அடங்கும்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இவர்கள் இருவரும் ஓய்வுபெற்றிருந்தாலும், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார்கள் என்பதால் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
இவர்களைபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தனது பதவியில் இருந்து விடைபெறுகிறார். டி20 உலகக்கோப்பையை பெற்ற பின்னர் ராகுல் டிராவிட்டிடம் கோப்பையை கொடுத்தபோது, அவரும் வீரர்களுடன் இணைந்து தனது ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி மகிழ்ந்தார். இவர், பயிற்சியாளராக இந்திய அணிக்கு 19 வயது உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று கொடுத்திருந்த நிலையில், தற்போது டி20 உலகக்கோப்பையும் பெற்று தந்துள்ளார்.