virat kohli x
T20

இது அதுல்ல.. அதே ஷாட்.. அதே வைப்! விராட் கோலியின் சிக்சரை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்! #viral

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சிறந்த இன்னிங்ஸை ஆடாவிட்டாலும் ஒரே ஒரு சிக்சரால் எல்லோரது பாராட்டையும் பெற்றுவருகிறார்.

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான லீக் போட்டிகளை கடந்து முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. லீக் போட்டி முழுவதும் 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், அதில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா முதலிய 8 அணிகள் சிறப்பாக செயல்பட்டு சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சாம்பியன் அணிகளுக்கு இடையேயான மோதல்கள் என்பதால் சூப்பர் 8 சுற்றுகள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற குரூப் 2 அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்தும், அமெரிக்காவை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்றன.

rashid khan

இந்நிலையில் குரூப் 1-ல் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் மூன்று பேரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்தியா 181 ரன்கள் எடுத்தது. விராட் கோலி நல்ல தொடக்கத்தை அமைத்த போதிலும் பெரிய இன்னிங்ஸை கொண்டுவருவதில் கோட்டைவிட்டார்.

virat kohli

ஆனால் கோலியால் பெரிய இன்னிங்ஸை ஆடமுடியாமல் போனாலும், தன்னுடைய ஒற்றை சிக்சரால் எல்லோரையும் இரண்டு வருடம் பின்னோக்கி அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் கோலி.

ஹரிஸ் ராஃப் ஷாட்டை மீண்டும் கொண்டுவந்த கோலி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் போனாலும், நவீன்-உல்-ஹக் வீசிய ஷார்ட் அண்ட் வைட் டெலிவரியை தூக்கி நேராக தலைக்குமேல் சிக்சரை பறக்கவிட்ட கோலி, அனைவரையும் மெல்போர்னில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு அவர் ஹரிஸ் ராஃப்க்கு எதிராக அடித்த புகழ்பெற்ற சிக்சரை, இன்று நவீனுக்கு எதிராகவும் நிகழ்த்தி காட்டினார். இதைப்பார்த்த ஹர்சா போக்ளே கமண்டரியில் புகழ்பெற்ற ஷாட்டை ஒப்பிட்டு பாராட்டி பேசினார். தற்போது ரசிகர்களும் அதை பாராட்டி வருகின்றனர்.