virat kohli pt web
T20

“உலகக்கோப்பைக்கு எங்க கிட்டதான் வரணும்” ஓவர் கான்பிடண்ட் ரசிகர்கள்.. திணறும் விராட்.. மாறுமா ஆட்டம்?

ஐம்பது ஓவர் உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரில் ஜொலித்த விராட் கோலிக்கு, இருபது ஓவர் உலகக்கோப்பை சோதனையாகவே அமைந்திருக்கிறது. ஆக்ரோஷமான வீரரை அமெரிக்க மண் அணைத்து வைத்திருப்பது குறித்து பார்க்கலாம்...

Angeshwar G

திணறும் ரன் மெஷின்

ஐபிஎல் முடிஞ்சதும் உலகக்கோப்பைக்கு எங்கக் கிட்டதான் வரணும்... சிஎஸ்கே ரசிகர்களை வம்பிழுக்க ஆர்.சி.பி ரசிகர்கள் பயன்படுத்திய வார்த்தைகள்தான் இவை. அவர்களது அந்த அதீத நம்பிக்கைக்கு காரணம் விராட் கோலி.

50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசி தொடர் நாயகனான இந்திய வீரர் விராட் கோலிக்கு, ஐபிஎல் தொடரும் சிறப்பாகவே அமைந்தது. நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 741 ரன்களை அவர் குவித்தார். இதன்மூலம் ஐபிஎல்லில் 2 முறை ஆரஞ்சு தொப்பியை வென்ற இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.

விராட் கோலி

ஆனால், அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக்கோப்பை விராட் கோலியின் திறமையை சோதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கு எந்த வகையிலும் சாதகமான சூழல் இல்லாத நியூயார்க் மைதானத்தில், ரன்மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலியும் ரன்களை குவிக்க திணறி வருகிறார்.

கவாஸ்கர் நம்பிக்கை

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு ரன்னில் நடையை கட்டிய அவர், பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்த போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டபோதும் விராட்கோலிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருபது ஓவர் உலகக்கோப்பையில் முதல்முறையாக கோல்டன் டக் - அவுட் ஆகி தனது ரசிகர்களை 3-ஆவது முறையாக அவர் ஏமாற்றி இருக்கிறார். இருபது ஓவர் உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி வெறும் 5 ரன்கள் மட்டுமே விராட் கோலி எடுத்துள்ளார்.

ஆட்டமிழந்து வெளியேறும் விராட்

அதேநேரத்தில், 3 போட்டிகளில் குறைவான ரன்கள் எடுத்ததால் விராட் கோலி சிறப்பாக விளையாடவில்லை என கூறமுடியாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். விராட் கோலி விரைவில் சிறந்த பார்ம்-க்கு திரும்புவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கரின் நம்பிக்கைக்கு காரணம் இல்லாமல் இல்லை. சர்வதேச போட்டிகளில் 3 ஆண்டுகளுக்கு மேலாக சதமடிக்காமல் இருந்த விராட் கோலி, விமர்சனங்களை விரட்டியடிக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இருபது ஓவர் போட்டியில் சதமடித்து சிறந்த பார்ம்-க்கு திரும்பி இருந்தார். தற்போது, நியூ யார்க் மைதானத்தில் போட்டிகள் நிறைவடைந்திருக்கும் சூழலில், இந்திய அணி தனது அடுத்த போட்டியை ஃப்ளோரிடா மைதானத்தில் விளையாட உள்ளது. கனடா அணிக்கு எதிரான அந்த ஆட்டம், விராட் கோலிக்கு கம்பேக் போட்டியாக அமையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.