சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இந்த இரு அணிகளும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். சென்னை அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குகிறார்; தோனி வீரராக மட்டும் விளையாடுகிறார்.
இந்தப் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைக்க காத்திருக்கிறார் விராட் கோலி. இந்த இரண்டு அணிகளுக்கு எதிராகவும் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி இரண்டு வீரர்களும் அதிகப்படியான ரன்களை அடித்துள்ளனர். அவர்களின் வரிசையில் தற்போது ஃபேஃப் டூபிளேசிஸும் பட்டியலில் இணைந்துள்ளார்.
RCB vs CSK அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களில் ”விராட் கோலி 985 ரன்கள், எம் எஸ் தோனி 740 ரன்கள், சுரேஷ் ரெய்னா 616 ரன்கள், டூபிளேசிஸ் 430 ரன்கள்” என முதல் 4 இடங்களில் நீடிக்கின்றனர்.
இந்நிலையில் எப்போதும் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடும் விராட்கோலி, 2024 ஐபிஎல் ஓப்பனிங் மோதலில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 3 இமாலய சாதனைகளை படைக்கவுள்ளார். இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் தவறவிட்ட விராட் கோலி, முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் நோக்கில் ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் போது விராட்கோலி 6 ரன்கள் எடுத்தால், டி20 போட்டிகளில் 12,000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார். தற்போதைய நிலவரப்படி, முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, 376 டி20 போட்டிகளில் விளையாடி 11,994 ரன்கள் எடுத்துள்ளார்.
35 வயதான விராட் கோலி டி20களில் ஒட்டுமொத்தமாக 100வது அரைசதங்களை அடிக்கவுள்ளார். ஒருவேளை சிஎஸ்கே அணிக்கு எதிராக 50 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், 100 டி20 அரைசதங்கள் அடித்த முதல் இந்திய பேட்டர் மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இந்தப்பட்டியலில் கிறிஸ் கெய்ல் (110), டேவிட் வார்னர் (109) என முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள விராட் கோலி, 31 போட்டிகளில் விளையாடி 985 ரன்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிராக 1000 ரன்கள் பதிவுசெய்ய விராட் கோலிக்கு 15 ரன்கள் தேவையாக உள்ளன. ஒருவேளை சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்களை எடுத்தால், இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது பேட்டர் என்ற சாதனையை படைப்பார்.