விராட் கோலி இன்ஸ்டா
T20

வெற்றிக் கொண்டாட்டம் முடிந்தபின் இங்கிலாந்துக்குப் பயணம்.. அவசரமாய் புறப்பட்டுச் சென்ற விராட் கோலி!

மும்பையில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்திற்குப் பிறகு விராட் கோலி மட்டும் உடனே லண்டன் புறப்பட்டுச் சென்ற படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நேற்று டெல்லி விமான நிலையம் மற்றும் ஹோட்டலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து மும்பை சென்ற இந்திய அணியினர், திறந்தவெளி வேனில் வான்கடே மைதானத்தை நோக்கிப் புறப்பட்டனர். அரபிக்கடலின் ஓரம் உள்ள மரைன் டிரைவ் பகுதியில் நேற்று மதியம் முதலே குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், இந்திய அணியினரை ஆரவாரத்தோடு வரவேற்றனர்.

பின்னர், மைதானத்தில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்திய அணியினரை உற்சாகம் பொங்க கூக்குரலிட்டு வரவேற்றனர். அங்கு உரையாற்றிய ரோகித் சர்மா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அதன்பிறகு, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு, பிசிசிஐ சார்பில் 125 கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பிறகு தங்களது வீரர்கள் தங்களது குடும்பத்தினரைச் சந்திக்க அவரவர் வீடுகளுக்குப் புறப்பட்டனர். ஆனால், விராட் கோலி மட்டும் உடனே லண்டன் புறப்பட்டுச் சென்றார். இதற்காக அவர் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் அவரது குழந்தைகள் (வாமிகா, அகாய்) லண்டனில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் மனைவி மற்றும் குழந்தைகளை சந்திப்பதற்காக விராட் கோலி உடனடியாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதையும் படிக்க: ரோகித் மற்றும் விராட் ஜெர்சி நம்பருக்கு ஓய்வா? ராபின் உத்தப்பா எதிர்ப்பு!

பார்படாஸில் இருந்து 16 மணி நேரம் தொடர் பயணத்திற்கு பின் இந்திய அணி டெல்லிக்கு வந்தது. அங்கு பிரதமரை சந்தித்து அடுத்த 4 மணி நேரத்தில் மீண்டும் மும்பைக்கு வந்தது. அதன்பின் வெற்றிப் பேரணி, டான்ஸ் என்று விராட் கோலி கொண்டாடிய நிலையில், கொஞ்சம்கூட ஓய்வே எடுக்காமல், லண்டன் புறப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வருங்காலங்களில் விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் இங்கிலாந்தில் குடியேற உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அவர்கள் எதுவும் வாய் திறக்கவில்லை என்றபோதும் அவர்கள் அடிக்கடி இங்கிலாந்தில் காணப்படுவதால் சமூக வலைதளங்கள் இப்படிச் செய்தி வெளியிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: தெலங்கானா| ஆசிரியர் இடமாற்றம்.. அவர் பள்ளிக்கே படிக்கச் சென்ற 113 மாணவர்கள்!