Virat Kohli | RCB  Swapan Mahapatra
T20

‘என் பிரெண்ட போல யாரு மச்சான்’... மைதானத்தில் தோனியுடன் மனம்விட்டு சிரித்து மகிழ்ந்த விராட் கோலி!

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2022 ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தனது மன அழுத்தம் குறித்தும், தோனி குறித்தும் வெளிப்படையாக விராட் கோலி பேசியிருந்ததும் முக்கிய காரணமாகும்.

சங்கீதா

ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி (மூன்று பேரும் ஐபிஎல்லில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர்கள்) ஆகியோர் விளையாடும் போட்டிகளில் மட்டும் பரபரப்பையும் மீறிய கவனித்தக்க விஷயங்கள் நடப்பது வழக்கம். அதுவும் தோனி - ரோகித் அல்லது தோனி - விராட் கோலி சந்திக்கும் போட்டிகள் என்றால் போதும், சொல்லவே வேண்டாம். ரசிகர்களுக்கு தனி உற்சாகம்தான்.

தோனி - விராட் கோலி

அதனால்தான் நேற்று சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கிடையே நடந்த போட்டியின்போதும் அப்படி உற்சாகமான விஷயங்கள் அமைந்தன. பெங்களூரு அணியை, சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தாலும், அதைவிட மைதானத்தில் நீண்ட நாட்களுக்குப்பிறகு தோனி மற்றும் விராட் கோலி சிறிதுநேரம் அளவளாவிய அந்த நிகழ்வுக்கான வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

இரண்டு லெஜண்ட்கள் என்ற கேப்ஷனுடன் ஐபிஎல் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி மற்றும் விராட் கோலி உரையாடிக் கொண்டிருந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாக இருவருக்குமான நட்பையும் மீறி, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2022 ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தனது மன அழுத்தம் குறித்தும், தோனி குறித்தும் வெளிப்படையாக விராட் கோலி பேசியிருந்ததும் முக்கிய காரணமாகும்.

ஏனெனில், கடந்த 2019-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு விராட் கோலி சதம் அடிக்க தடுமாறியதும், அத்துடன் கேப்டன்சி விவகாரத்திலும் சர்ச்சைகள் எழுந்தநிலையில், வெளிப்படையாக அதுகுறித்த கருத்து தெரிவிக்காமல் அவர் இருந்தார். எனினும், ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய விராட் கோலி, கேப்டன் பதவியிலிருந்து விலகியப் பிறகு பலரிடம் என்னுடைய அலைப்பேசி எண் இருந்தும், தோனி மட்டும்தான் தன்னை தொடர்பு கொண்டதாகவும், குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், பிசிசிஐ மூத்த அதிகாரி உள்பட பலரும் அவரை கடுமையாக சாடியிருந்தனர்.

என்ன குறுஞ்செய்தி அது என்று விராட் கோலி வெளிப்படையாக சொல்லவேண்டும் என்று அவர்கள் கேட்டிருந்த நிலையில், பல நாட்கள் கழித்து தனது 34-வது பிறந்தநாளின்போது, “நீங்கள் மன வலிமையானவராக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், நீங்கள் அவ்வாறு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும், தனிப்பட்ட அளவில் வலுவாக உள்ளது போன்ற தோற்றம் கொடுத்துவிட்டால் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்க மறந்துவிடுவார்கள்” என்று தனக்கு தோனி அனுப்பிய குறுஞ்செய்தி தனது மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ஒருப்பக்கம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், தனது மன அழுத்தம் குறித்து பேசியப் பின்பு 1021 நாட்கள் கழித்து ஆசியக் கோப்பை தொடரிலும் விராட் கோலி 5 இன்னிங்சில் 276 ரன்கள் அடித்து (1 சதம், 2 அரை சதம்) தன்னை மீண்டும் ரன் மெஷின் என்று நிரூபித்திருந்தார். தற்போது ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி தன்னை கட்டிப்பிடித்து அரவணைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தை அவர்களது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

என்னதான் ஒரு புறம் விராட் கோலி - சவுரவ் கங்குலி இடையிலான சர்ச்சை ஒருபுறம் பற்றி எரிந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் ஜிகிரி தோஸ்து என தோனி - விராட் இடையிலான நட்பும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல், தோனி - விராட் கோலி களத்தில் சந்திக்கும் கடைசிப் போட்டி இதுதான் என்றும் நேற்று ரசிகர்கள் இணையத்தில் உருக்கமாக பதிவிட்டு வந்தனர். ஒருவேளை தோனி இந்த ஐபிஎல் தொடரோடு முடித்துக் கொண்டால், சின்னசாமி மைதானத்தில் இருவரும் இனி இணைந்து விளையாட வாய்ப்பில்லை. ஆனால், அடுத்த சுற்றுக்கு சென்றால் இருவரும் களத்தில் சந்திக்க வாய்ப்புண்டு.