virat pt web
T20

‘இதுதான் எனது கடைசி டி20 கிரிக்கெட் போட்டி’ - உலகக்கோப்பை வென்ற கையுடன் ஓய்வை அறிவித்தார் கோலி!

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தென்னாப்ரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Angeshwar G

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது. 177 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில், ஹர்திக் 3 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்திய அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. ஆட்ட நாயகனாக 76 ரன்களை எடுத்த விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி முடிந்து பேசிய விராட் கோலி, டி20 போட்டிகளில் தனது ஓஉவினை அறிவித்துள்ளார். போட்டி முடிந்து பேசிய அவர், “இதுவே எனது கடைசி டி20 உலகக்கோப்பை போட்டி. இந்த வெற்றியைத்தான் நாங்கள் அடைய விரும்பினோம். இந்தியாவுக்காக விளையாடும் கடைசி டி20 போட்டியும் இதுதான்.

கோப்பையை வெல்ல விரும்பினோம். அடுத்த தலைமுறை இந்திய டி20 ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய நேரம். ஐசிசி போட்டியில் இந்த வெற்றியைப் பெறுவதற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். இது எனக்கு ஆறாவது டி20 உலகக்கோப்பைதான்; ஆனால் ரோஹித் சர்மாவிற்கு இது 9 ஆவது உலகக்கோப்பை. இந்த வெற்றிக்கு தகுதியானவர். இது ஒரு அற்புதமான நாள்” என தெரிவித்தார்.

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கடைசியாக விளையாடிய இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டி வரை விராட் கோலி சொதப்பலாகவே விளையாடினார். ஆனால், முக்கியமான இறுதிப் போட்டியில் 76 ரன்கள் அடித்துக் கொடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

மோசமான பார்ம் காரணமாக விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், ‘அவர் கடைசி போட்டிக்காக தன்னுடயை பலத்தை சேர்த்து வைத்திருப்பார்’ என்று ஆதரவு கொடுத்தார் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி, இறுதிப்போட்டியில் 76 ரன்கள் விளாசி ரோகித் சர்மா கொடுத்த நம்பிக்கையை காப்பாற்றினார் விராட் கோலி!