virat kohli pt
T20

“அவரை தயவுசெய்து நம்பர் 3-க்கு அனுப்புங்க” விராட் கோலி 0 ரன்னில் வெளியேறியதால் ரசிகர்கள் அதிருப்தி!

2024 டி20 உலகக்கோப்பையில் தொடக்க வீரராக விளையாடிவரும் விராட் கோலி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Rishan Vengai

இந்திய அணிக்காக நம்பர் 3 இடத்தில் களமிறங்கி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தும் விராட் கோலி, நடப்பு 2024 டி20 உலகக்கோப்பையில் தொடக்க வீரராக விளையாடிவருகிறார். அனைத்து அணிகளின் தொடக்க வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கலக்கிவரும் நிலையில், இந்திய அணியில் தொடக்க வீரராக இருக்கும் விராட் கோலி மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

1, 4, 0, 24 ரன்கள் என சொற்ப ரன்களை மட்டுமே எடுத்த விராட் கோலி, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் என்ற நல்ல தொடக்கம் கிடைத்தும் தன்னுடைய விக்கெட்டை தானாகவே கிஃப்ட் செய்து வெளியேறினார். 1 பவுண்டரி 3 சிக்சர்கள் என அதிரடியாக விளையாடிய விராட் கோலி, ஆக்ரோசமாக விளையாட சென்று தன்னுடைய கூர்மையான ஆட்டத்தை இழந்துவருகிறார்.

virat kohli

இந்நிலையில் இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் 5 பந்தை சந்தித்து 0 ரன்னில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடக்க வீரராக விராட் கோலி சொற்ப ரன்களே அடித்துவரும் நிலையில் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

அவரை நம்பர் 3-க்கு அனுப்புங்க..

விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், நம்பர் 3-ல் தலைசிறந்த ஆட்டத்தை ஆடும் கோலியை வைத்து என்ன பா பன்றிங்க, அவரை மீண்டும் மூன்றாவது இடத்திற்கே அனுப்புங்கள் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

விராட் கோலி 0 ரன்னில் வெளியேறியதை தொடர்ந்து ஒரு ரசிகர், “அவரை நம்பர் 3-க்கு அனுப்புங்க” என்றும், இன்னும் ஒரு ரசிகர் “டிவி ஆஃப்” என்றும் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.

நடிகர் சரத்குமாரும் இதே கோரிக்கையை வைத்துள்ளார். “டி20 உலகக்கோப்பை தொடரை பார்த்து வருகிறேன்; இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது; விராட் கோலி தொடக்க வீரராக அல்லாமல் மூன்றாவது வீரராக விளையாட வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி பெங்களூரு அணிக்காக தொடக்கவீரராக களமிறங்கி ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 92 ரன்கள் குவித்தார். 206 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.